Arunachaleswarar Temple: மெய்சிலிர்க்க வைக்கும் சிற்பங்கள் கொண்ட தலம்!
பொன்னாக்குடி ஶ்ரீ உண்ணாமுலை அம்மன் சமேத ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா பொன்னாக்குடியில் பிரசித்தி பெற்ற உண்ணாமலை அம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. தென் மாவட்டங்களில் திருவண்ணாமலை அடுத்து பொன்னாக்குடியில் அருணாச்சலேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார்.
தெப்பக்குளத்தின் அருகில் சிறிய மண்டபத்தில் இருந்த எம்பெருமான் ஈசனுக்கு காண்போர் வியக்கும் வண்ணம் கலைவண்ணங்களை கொட்டி ஆலயம் எழுப்பியுள்ளனர். இந்த ஆலயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வரலாறு கூறுகிறது.
ஆடல்வல்லான் ஈசன் இங்கு அருணாச்சலேஸ்வரர் ஆகவும் கருணையே உருவான அம்பாள் உண்ணாமலை அம்பாளாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். சுவாமி சன்னதி கலக்கு நோக்கியும், அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
கிழக்கு வாசல், தெற்கு வாசல் இறை இரு வாசல்கள் கொண்டிருக்கிறது இவ்வாலயம். ஆன்மீகத்தின் கருவூலமாக திகழும் இக்கோயிலில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரங்களும் காணப்படுகின்றன. கிழக்கு நோக்கி உள்ள கோயிலில் நுழைந்ததும் கொடி மர மண்டபம் அதில் பலிபீடம் தொடர்ந்து சூரியன், சந்திரன், அதிகார நந்தி மற்றும் கலைவண்ணங்களால் அழகிற அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சிற்பங்கள் கோயிலுக்கு வருவோரை மெய்சிலிர்க்க வைக்கிறது. அத்துடன் பழங்கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றன. உட்பிரகாரத்தில் 63 நாயன்மார்கள், சுரதேவர், வராகி அம்மன், சாமுண்டி, வைஷ்ணவி, சரஸ்வதி, கணபதி, முருகர், தக்ஷிணாமூர்த்தி, சனீஸ்வரர், பைரவர், சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் காணப்படுகின்றன.
90 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழமையான இந்த கோயிலில் கொடிமர மண்டபத்தில் ராசி கட்டங்கள் உள்ளது தனிச்சிறப்பாகும். ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், பைரவ அஷ்டமி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.