Sivanthiappar Temple: நாயக்க மன்னர் சிவந்தியப்பர் கட்டிய கோயில்!
ஸ்ரீ உலகம்மையின் பேரருளைப் பெற்ற ஸ்ரீ நமச்சிவாய கவிராயர் வாழ்ந்த புண்ணிய தலமாக இந்த தலம் விளங்குகின்றது.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் வடமொழியில் ஸ்ரீ மார்க்க சம்பிரட்சனி, ஸ்ரீ சிவ பாலேஸ்வரர் என இறைவனை அழைக்கின்றனர்.
இத்தலத்தின் அருகில் உள்ள பாபநாசம் தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உலக அம்மையின் பேரருளைப் பெற்ற ஸ்ரீ நமச்சிவாய கவிராயர் வாழ்ந்த புண்ணிய ஸ்தலமாக இந்த தலம் விளங்குகின்றது. நாயக்க மன்னர் சிவந்தியப்பரால் கட்டப்பட்ட கோயில் என்பதால் இக்கோயிலில் உள்ள சுவாமிக்கு சிவந்தியப்பர் எனப் பெயர் சூட்டப்பட்டதாகக் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.
நாயக்கர் மன்னர்கள் உருவமே கோயிலின் கொடிமரம் கடந்து உள்ளே செல்லும் வாயிலில் எதிர் எதிராக சிவந்தியப்பர் நாயக்கரும், முத்து வீரப்ப நாயக்கரின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் பொக்கிஷத்தார்கள் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருக்கோயிலில் திருவனந்தல், கால சந்தி, சாய ரட்சை, அர்த்த சாம பள்ளியறை, நான்கு கால பூஜை என அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசித் திருவிழா 10 நாட்கள் கொடி ஏற்றப்பட்டு 10 நாட்களும் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
அது மட்டும் இன்றி ஆண்டுதோறும் வரும் ஸ்ரீ கந்தசஷ்டி திருவிழாவை ஒட்டி ஆறு நாட்களும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மூன்று தினங்கள் 108 ஸ்ரீரங்கம், 108 கல் சங்குகள், 108 கலசங்கள் வைத்துச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு கார்த்திகை சோமவாரத்தன்றும் உள்ளே எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கும் சந்தன கலபம் சாத்தப்பட்டுச் சிறப்புத் தீபாராதனைகளும், சோமாஸ்கந்த மூர்த்திக்குச் சிறப்புப் பூஜையும் நடைபெறுகிறது.
டாபிக்ஸ்