Eri Katha Ramar: இந்திரா காந்தி வழிபட்ட தலம்!
வரலாற்று பெருமை வாய்ந்த ஏரி காத்த ராமர் கோயில் குறித்து இங்கே காணலாம்.
சென்னையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டு நகரில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மதுராந்தகம் . வரலாற்று பெருமை வாய்ந்த அந்த நகரில் ஸ்ரீ கோதண்ட ராமர் என்னும் ஏரி காத்த ராமர் கோயில் கொண்டுள்ளார்.
இங்கு 1100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் பராந்தகச் சோழன் கோயிலில் வணங்கிவிட்டு வட மாநிலங்களின் மீது படைய யெடுத்து சென்று வெற்றி பெற்றதால் தனது பேரனுக்கு மதுராந்தக உத்தம சோழன் என பெயர் வைத்தார்.
இதற்கான கல்வெட்டு ராமர் பீடத்தில் உள்ளது. 1968 இல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இங்கு வழிபட்டுசென்று நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதையும் இந்த நகர மக்கள் பெருமையுடன் நினைவு கூறுகின்றனர்.
ஆங்கில ஆட்சிக் காலத்தில் செங்கல்பட்டு ஆட்சியராய் இருந்தவர் பிளேஸ் துரை அப்போது பலத்த மழை காரணமாக மதுராந்தகம் ஏரி நிறைந்திருந்தது. தெய்வ குற்றம் காரணமாக ஏரி கரை உடையும் நிலை இருக்கிறது என அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
உங்கள் தெய்வம் சக்தி இருந்தால் ஏரி உடையாமல் காக்கட்டும் அப்போது ஜனகவல்லி தாயார் சன்னதியில் புதுப்பித்து தருகிறேன் என்ற வாக்குறுதி அளித்தார். எந்நேரமும் ஏரி உடைய பயத்துடன் வெள்ளைக்கார ஆட்சியர் இரவு நேரத்தில் அதன் பக்கமாக சென்று பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது வில் ஏந்திய ராமர் தனது தம்பி லட்சுமணபுடன் வந்து காத்து நின்றதை கண்டார். ஏரி உடையாமல் காத்ததால் ஏரி காத்த ராமர் என பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். ஆனி மாதத்தில் பிரம்மோற்சவம் விழா, பங்குனி மாதத்தில் ஸ்ரீ ராமன் நவமி, தை மாதத்தில் பரிவேட்டை, ஆவணி மாதத்தில் ஸ்ரீ ராமானுஜர் தீட்சை தினம் உள்ளிட்ட விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
இந்த புனித மண்ணில் புஷ்கரணியாக ஸ்ரீ ராமபாத தீர்த்த குளமும் கிளியாரும் நீர் தடாகமாக உள்ளது. இக்கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த தலத்துக்கு திருமணம் ஆகாதவர்களும், குழந்தை பேறு வேண்டுபவர்களும் ஒருமுறை வந்து வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மதுராந்தகம் நகரின் மேற்கிலும் ஏரிக்கு கிழக்கிலும் இந்த கோயில் உள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. மதுராந்தகம் மக்களை ஏரி காத்த ராமர் காத்து வருவதாக மக்கள் நம்புகின்றனர்.