கொசவன் பேட்டை ஸ்ரீகாமாட்சி உடனுறை பார்வதீஸ்வரர் கோயில்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கொசவன் பேட்டை ஸ்ரீகாமாட்சி உடனுறை பார்வதீஸ்வரர் கோயில்

கொசவன் பேட்டை ஸ்ரீகாமாட்சி உடனுறை பார்வதீஸ்வரர் கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 13, 2022 11:50 PM IST

கொசவன் பேட்டை அருள்மிகு ஸ்ரீகாமாட்சி உடனுறை பார்வதீஸ்வரர் கோயில் குறித்து இங்கே காண்போம்.

<p>அருள்மிகு ஸ்ரீகாமாட்சி உடனுறை பார்வதீஸ்வரர்</p>
<p>அருள்மிகு ஸ்ரீகாமாட்சி உடனுறை பார்வதீஸ்வரர்</p>

இங்குத் தனி முருகன் ஆலயம் அமையப்பெற்ற காரணத்தினால் இவ்வூர் குமார புரி என அழைக்கப்பட்டுள்ளது. கருவறையில் அழகிய லிங்க வடிவில் மேற்கு நோக்கி சத்தியோஜாத மூர்த்தியாக இறைவன் விளங்குகின்றார். 

தொன்மையான வடிவம் சுமார் ஐந்து அடி உயரத்தில் கம்பீரமாய் அழகிய பானத்துடன் வேலைப்பாடுகள் அமைந்த ஆவுடையார் மேல் மயிலை கபாலீஸ்வரரை ஒத்த மூர்த்தியாகப் பக்தர்களுக்கு அருள் புரிகின்றார்.

இறைவன் அழகுக்குத் தான் ஒன்றும் சளைத்தவர் அல்ல என்று கூறாமல் கூறுவது போல அம்பிகை சுமார் ஆறு அடி உயரத்தில் கம்பீரமாகப் புன்னகை ததும்பும் மதனத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார். 

சிரசில் கரண்ட மகுடம், மேற்கரங்களில் அங்குசம் பாசம் தாங்கி, கீழே இரு கரங்களில் அவய வரத முத்திரை உடன் இடது காலை சற்று முன்வைத்து பெண்மைக்கு உரிய நளின பாவத்துடன் பிரிபங்க நிலையில் அற்ப பத்ம பீடத்தில் நிற்கும் கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார்.

விஜயநகர நாயக்கர் காலத்தில் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. கோயிலில் மூலவராக பார்வதீஸ்வரர், அம்பாளாக ஸ்ரீ காமாட்சி அம்மாள், உற்சவராக நடராஜரும் கோயிலில் அமைந்துள்ளனர். தலமரமாகப் பலா மரம் அமைந்துள்ளது.

சுவாமி, அம்பாள் சன்னதிகளை அடுத்து உற்சவமூர்த்தி நடராஜர் சிவகாமி அம்மை மணிவாசகப் பெருமானுடன் ஒரு சிறிய சபா மண்டபம், வெளிப்புறம் நந்தி மண்டபம், பலிபீடம் கொடிக்கம்பத்துடன் காட்சி தருகிறது. நந்தி மண்டப விதானத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் பழமையைப் பறைசாற்றுகின்றது இந்த தோற்றம். நந்தி சன்னதி சிம்ம வாகன சன்னதிகளின் சாளரும் போன்று சிறு துவாரம் அமைந்துள்ளது. சாலரும் வழியாக இறைவன் இறைவியைத் தரிசிப்பது சாலச் சிறந்தது என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு சிவாலயத்திற்கு உரிய கோஷ்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகள் அவைகள் அமையப் பெற்றுள்ளன. சூரிய பகவான், ஆஞ்சநேயர் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். தற்போது இந்த ஆலயத்தில் நூதன சனீஸ்வர பகவான் சன்னதியும் கட்டப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்த உடன் நாம் முதலில் கோஷ்ட தெய்வமான விஷ்ணு துர்க்கையைத் தரிசிக்கலாம். அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்த வாகனங்கள் ஆலயத்திற்கு அழகு சேர்க்கின்றன. இத்தலத்தில் நடக்கும் ஆருத்ரா தரிசனமும் திருவாதிரை நாள் என்று அம்பலவாணர் திருவீதி உலாவும் பிரசத்தி பெற்றவை.

பார்வதீஸ்வரர் சுவாமி அமாவாசை அன்று அபிஷேகம் செய்த வழிபட வழக்குகளில் வெற்றி, சண்டை சச்சரவுகள், காரியத்தடைகள் நீங்கி காரிய சித்தி உண்டாகும். திருமணம் கைகூடக் கன்னிப்பெண்கள் இந்த கோயிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட நல்ல பலன்களை விரைவில் பெறலாம். தினசரி வழிபாட்டு முறைகளும், உற்சவாதி விசேஷ தினங்களும் முறைப்படி பின்பற்றப்படுகின்றன.

Whats_app_banner