Sri Saneeswarar Temple: பிரம்மாண்டமான சனீஸ்வரர் கோயில்!
கோரம்பள்ளம் ஸ்ரீ சனீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஐயநடைப்பு ஸ்ரீ சித்தர் நகரில் அமைந்துள்ள மங்களம் தரும் ஸ்ரீ சனீஸ்வரர் கோயிலை போன்ற மிகப்பிரம்மாண்டமான கோயில் வேறெங்கும் இல்லை.
இந்த கோயிலின் வளாகத்தில் அதிர்ஷ்ட விநாயகர், சரஸ்வதி தேவி, மகாலட்சுமி, மங்கலம் தரும் ஸ்ரீ சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆலயத்தை சுற்றியுள்ள கிராம மக்களின் வழிபாடுகளை கருத்தில் கொண்டு சுடலை, வீரனார், முனீஸ்வரனார் காவல் தெய்வங்களுக்கும் தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கருவறையில் வடக்கு நோக்கி ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி சாந்த சொரூபியாக மிகப்பிரமாண்டமாக 11 அடி உயரத்தில் எழுந்தருளி உள்ளார். ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி, பிரத்தியங்கிரா தேவி புன்னகை ததும்பும் மழலை முகத்துடன் கையில் திரிசூலம், தமருகம், சர்பம், குங்கும பாத்திரங்களை ஏந்திய சிங்க முக உருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.
ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவியை வணங்கினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை வரம் கிட்டும், கொடிய நோய்கள் விலகிப் போகும் என்பது ஐதீகமாகும். ஆலயத்தில் மேற்கு நோக்கிய திசையில் 11 அடி உயரத்தில் ஒரே கல்லில் உருவானவராக ஸ்ரீ மஹா கால பைரவர் விஸ்வரூப கோலத்தில் மிக பிரம்மாண்டமாக எழுந்தருளி காட்சி கொடுத்து வருகிறார்.
கால பைரவரை வணங்கினால் தொழில் மேம்படும், அரசியலில் உயர்ந்த பொறுப்புகள் தேடி வரும். தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் சிறப்பு மகா யாக வழிபாட்டில் பங்கேற்றால் கை மேல் பலன் கிடைத்திடுவதால் பக்தர்கள் பலரும் அந்நாளில் திரளாக வந்து சாந்தஸ்ரீ சத்குரு ஸ்ரீனிவாச சித்தரின் அருள் ஆசியோடு ஸ்ரீ மகாகால பைரவரையும், மகா பிரத்தியங்கிரா தேவியையும் தவறாமல் வணங்கி செல்கின்றனர்.