குருபகவானின் விஷேச தலம்!
குருவுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அன்று வழிபடுவது விசேஷமானது.
குரு பார்க்கக் கோடி நன்மை என்ற வழக்கில் குரு பகவானின் பெருமையைச் சொல்வார்கள். தனுசு மற்றும் மீனம் ஆகிய ராசிகளில் நாயகனாக விளங்கும் குரு பகவான். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களின் நாயகர்.
ஒரு ஜாதகரின் வாழ்வில் 16 ஆண்டுகள் நடைபெறும் ஒரு திசையில் சிறந்த அனுபவங்களைக் கொடுத்து அவரை தரமாக்குவது இவர்தான். ஞானசம்பந்தப் பெருமானின் பாடல் பெற்ற இந்த தேவாரத் திருத்தலம். கும்பகோணத்தை அடுத்த வலங்கைமானிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம்.
ஆலமரத்தின் கீழே அமர்ந்தவராக சனகாதி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்ததால் இந்த தலம் ஆலங்குடி என்ற பெயர் பெற்றது. தவிரப் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தியதாலும் ஆலங்குடி என்று இந்த தலத்திற்குப் பெயர் வந்தது.
ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களைக் கொண்டதாக விளங்குகிறது இந்த திருக்கோயில். சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்த தலத்திற்கு வந்த போது வெட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அப்போது சிவபெருமானே வந்து உதவினார்.
அந்த வெள்ளப்பெருக்கில் ஓடம் நிலை தடுமாறி பாறையில் மோதியது. அதனால் உண்டான கலக்கத்தைப் போக்கி விநாயகர், கலங்காமல் காத்த விநாயகர் என்ற பெயருடன் இனிய காட்சி அளிக்கிறார். செல்வத்தின் அதிதேவதையாக விளங்கும் திருமகள், வெற்றிவேல் கையில் ஏந்திய ஞானக்குழந்தை வேலவன், பாமாலைகளால் அலங்கரித்து நால்வர் என்று பலப்பல மூர்த்திகளை இங்கே நாம் காணலாம்.
மூலஸ்தானத்தில் ஆபத்சகாயர் என்ற பெயருடன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார் சிவபெருமான். ஏழவார்குழலி என்ற நாமத்துடன் தனிச்சன்னிதி கொண்டிருக்கிறார் அம்பிகை. இவர் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் அளிக்கிறார்.
சனீஸ்வர பகவானுக்குத் தனி சன்னதி அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தின் விசேஷம் மூர்த்தி ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி. ஞான மூர்த்தியான இந்த தட்சிணாமூர்த்தி தான் குருவுக்கு அதிதேவதை. அதனால்தான் வருடந்தோறும் நடைபெறும் குருப் பெயர்ச்சியின் போதும் குருவின் அருளைப் பெறும் பரிகாரத்திற்காகவும் ஏராளமான பக்தர்கள் தரிசிக்க இங்கே வருகிறார்கள்.
குரு தக்ஷிணாமூர்த்தி என்ற பெயருடன் விளங்கும் இந்த பெருமானை குருவுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அன்று வழிபடுவது விசேஷமானது