Varahi Amman: தொடங்கியது ஆஷாட நவராத்திரி - தோஷமே நெருங்க முடியாத அம்மன் வராகி!
ஸ்ரீ வராகி அம்மன் விரதத்தின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் கையில் பஞ்சபாணங்கள் இருக்கும். அதிலிருந்து உருவானவர்தான் ஸ்ரீ மகா வராகி என்ற அம்மன். அம்மனின் சேனைகளுக்குத் தலைவியாகவும், அம்மனை பாதுகாக்கும் பாதுகாவலராகவும் வராகி முகத்தோடு இந்த அம்மன் காட்சியளிக்கிறார்.
சப்த மாதாக்களில் இவர் ஆறாவதாகப் பூஜிக்கப்படக் கூடியவர். மனிதனின் உடலில் இருக்கக்கூடிய ஆறு ஆதார சக்கரங்களில் நெற்றியில் இரண்டு கண் புருவங்களுக்கு இடையில் இருக்கக்கூடிய சக்கரத்திற்கு வாராகி அம்மன் தான் தேவதை.
ஆனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை 9 நாட்கள் வராகி நவராத்திரி கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய நவராத்திரி தான் அனைவருக்கும் நவராத்திரி என நினைவுக்கு வரும். ஆனால் 12 மாதங்களும் 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலமும் இங்கு உண்டு.
தற்போது வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என நவராத்திரிகளில் நான்கு வகை உள்ளன. இன்றிலிருந்து ஆஷாட நவராத்திரி தொடங்குகிறது. குறிப்பாக நவராத்திரியின் நடுவில் வரக்கூடிய பஞ்சமி திதி என்று வராகி அம்மனை வழிபாடு செய்யக்கூடிய சிறப்பு நாளாகும்.
இந்த நாளில் விரதம் இருந்து வராகி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் செய்து வழிபட்டால் சிறந்த பேச்சுத்திறன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குறிப்பாக ஜோதிடத்தின்படி ராகு, செவ்வாய் மற்றும் கேது கிரகங்களால் தோஷங்கள் ஏற்பட்டால் இந்த அம்மனின் வழிபட்டால் அவை விலகும் எனக் கூறப்படுகிறது.
தீய மந்திரங்கள், செய்வினைகள் உள்ளிட்ட எந்த பாதிப்புகளாக இருந்தாலும் வராகி அம்மனை வழிபட்டால் அவை அனைத்தும் உங்களிடம் நெருங்காது எனக் கூறப்படுகிறது.
இந்த நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வராகி அம்மனுக்கு வலப்பக்கத்தில் வாழைத்தண்டு மற்றும் தாமரைத் தண்டு வைத்துத் திரி செய்து நெய் உற்று தீபம் ஏற்றினால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் சிவப்பு நிற மலர்களால் பூஜை செய்து, தோல் உரிக்காத கரும்பு, உளுந்து வடை, மிளகுடன் செய்யப்பட்ட தயிர் சாதம், சக்கரவல்லி கிழங்கு, சுக்கு பானகம் உள்ளிட்டவற்றை நைவேத்தியம் செய்து வழிபட்டால் அனைத்து ஆபத்துகளும் விலகும் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு ஸ்ரீ வராகி அம்மனை இந்த நவராத்திரி நாட்களில் தொடர்ந்து பூஜை செய்து வழிபட்டால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எந்த ஆபத்தும் நெருங்காது என்பது ஐதீகமாகும். மிகவும் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இந்த ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும்.
நவராத்திரியான இந்த ஒன்பது நாட்களும் தஞ்சை பெரிய கோயில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் திருவிழாக் கோலமாகக் காணப்படும்.
டாபிக்ஸ்