Shri Gangajatatheeswarar : தேவார திருத்தலமான கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில்!
பழமையான கங்காஜடாதீஸ்வரர் திருக்கோயில் பற்றி இங்கு காண்போம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கோவிந்தபுத்தூர் கிராமத்தில் காவிரி நீர் பாயும் கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் விவசாய நிலங்களின் நடுவே அழகுற ஓர் சிவாலயம் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 47வது தலமாக கங்கா ஜடாதிஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகள் இத்தலமே தேவார திருத்தலம் என்பதற்கு சான்றாக திகழ்கிறது. ஆலயத்தின் எதிரே அர்ஜுன தீர்த்த குளம் உள்ளது. ஆலயத்தின் முகப்பில் பரமனுக்கு பாசு பால் சொரிந்து வழிபடும் கதை வடிவம் காணப்படுகிறது.
ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே செல்லும்போது வாசற்படிக்கட்டு நமக்கு தென்படும். இந்த படிக்கட்டானது முற்றிலும் கடல்பாசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்லும்போது முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அமையப்பட்டுள்ள சங்க முகத்தை கொண்டுள்ள முன் மண்டப தூண்கள் பல்லவர் கால கலைத்திறனை பறைசாற்றுகின்றன.
வலப்பக்கம் தனி விமானத்துடன் கூடிய அம்பாள் சன்னதி தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. மகா மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் கங்கா ஜடாதீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஈசனை விஜயன் வழி பட்டதால் விஜய நாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
கணபதி, கந்தன், கஜலட்சுமி சன்னதிகளும் உள்ளன. சிவலிங்கத்தின் மீது பசு பாலை பொழிந்து வழிபடும் காட்சி, அர்ஜுனன் தவம் புரிதல் என அநேக சிற்பங்கள் கருவறையின் வெளியே மேற்கு சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. நின்ற கோலத்தில் விஷ்ணு, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் அப்பர் சுவாமிகள் அருளிய தேவார கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
பிரதோஷம் சிவராத்திரி போன்ற அனைத்து விசேஷங்களுக்கும் சிறப்புர பூஜைகள் நடத்தப்படுகின்றன. திருமணம், கல்வி, தொழில் ஆரம்பிக்கும் போது இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அரியலூர் மாவட்டம் தா பலூரிலிருந்து இவ்வூரை அடையலாம். அரியலூரில் இருந்து வி கைகாட்டி விக்கிரமங்கலம் வழியாகவும் கோவிந்த புத்தூர் வரலாம்.