Naganathaswamy Temple: சுயம்புலிங்கமாக திருமாலுக்கு காட்சியளித்த தலம்!
தோஷங்கள் போக்கும் நாகூர் நாகநாத சுவாமி கோயில் குறித்து இங்கே காண்போம்.
ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட நாகூர் அருள்மிகு நாகவல்லி சமேத நாகநாத சுவாமி திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றினாலும் சிறப்பு பெற்றது. தில்லைக்கு நிகரான சிறப்புடையது. பிரம்மன், இந்திரன், சந்திரன், துர்வாசர், சப்தரிஷிகள், உறிக்திற சன்மன் ஆகியோரால் யுகங்கள் தோறும் வழிவிடப்பெற்ற தலம்.
நாகராஜன் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய நாகதோஷ பரிகார தலம். சந்திரனாக உருவாக்கப்பட்ட சந்திர தீர்த்தத்தில் நீராடி சிராத்தம், தான தர்மம் செய்தால் கயாவில் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். தலவிருட்சம் புன்னை மரம். வைகாசி மாதம் பௌர்ணமி நாளில் புன்னை மரத்தடியில் சுயம்புலிங்கமாக தோன்றி திருமாலுக்கு காட்சியளித்த தலம் என வரலாறு கூறுகிறது.
இவ்வூரில் நல்ல பாம்பு யாரையும் தீண்டியது கிடையாது என்று கூறப்படுகிறது. உட்பிரகார கன்னி மூலையில் ராகு பகவான் விமானம் மண்டபத்துடன் தனி சன்னதியில் நாகவல்லி, நாகா கன்னியருடன் எழுந்தருளி அருள் புரிகின்றார்.
சுவாமிக்கு வலது புறத்தில் உற்சவர் சந்திரசேகரர் கல்யாண சுந்தரர் தியாகராஜனும், இடதுபுறத்தில் அம்பாள் நாகவல்லி காட்சி கொடுத்த நாயனார், நடராஜர், ஐயப்பன் தனித்தனி சன்னதியில் காட்சி தருகின்றனர்.
உட்பிரகாரத்தில் ஜுரதேவர், தட்சிணாமூர்த்தி, நாகக்கன்னிகள் ,வலம்புரி, விநாயகர், சுப்ரமணியர், தத்த புருசலிங்கம், மகாலட்சுமி நால்வரும் இடதுபுரத்தில் பிரம்மா, துர்க்கை, காசி விஸ்வநாதர், நர்த்தன விநாயகர், சனீஸ்வர பகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள் புரிகின்றனர்.
நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் என அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தி ஆவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர்.