Sathuragiri Temple: சதுரகிரி பக்தர்களுக்கு குட் நியூஸ்..நாளை முதல் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி!
ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல நாளை முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல், ஆடி அமாவாசை, தை அமாவாசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும்.
இந்த கோயிலுக்கு செல்ல மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த நிலையில் பிரதோஷம் மற்றும் ஆடி மாதம் 1 ஆம் தேதி வரும் அமாவாசையை முன்னிட்டு நாளை முதல் (ஜூலை 15) ஜூலை 18 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நாட்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மலைக் கோயிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. தற்போது கோடை காலம் என்பதால் மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதனிடையே, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் முக்கியத் திருவிழாவான ஆடி அமாவாசை திருவிழா அடுத்த மாதம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்