Thoothukudi: தூத்துக்குடி சிவன் கோயில் தேரோட்டம்..தேரை வடம் பிடித்து இழுத்த அமைச்சர் கீதா ஜீவன்!
Thoothukudi Sivan Temple: தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை தோரோட்ட திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் (சிவன்) கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள், காலை, மாலை ரத வீதிகளில் உலா வருதல் நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை அமைச்சர் கீதா ஜீவன் வடம்பிடித்து இழுத்து துவக்கிவைத்தார். தேருக்கு முன்பாக ஆடும் குதிரை, மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பத்துடன் சிறிய தேரில் மகா கணபதியும், முருகப் பெருமானும், பெரிய தேரில் சுவாமி சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மாளும் பவனி வருகின்றனர். தேரோட்டத்தில் திராள பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது இன்று (மே 3 ) நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு காலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் சுவாமி, அம்மன் பரிவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 10 மணிக்கு தேரை வடம்பிடித்து இழுத்து சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. இதில் ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
சிறிய தேரில் மகா கணபதியும், முருகப் பெருமானும், பெரிய தேரில் சுவாமி சங்கர ராமேஸ்வரர், பாகம்பிரியாள் அம்மாளும் நான்கு ரதவீதிகளில் பவனி வருகின்றனர். மேலும், தேருக்கு முன்பாக புதுச்சேரி, விருதாச்சலம், கரூர் சிவ தொண்டர்களின் சிவ கைலாய சிவ பூதக்கண வாத்தியங்கள், தேவார இன்னிசை, தேவ பாராயணம், யானை, ஆடும் குதிரை, மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், மாணவ, மாணவிகளின் வீர விளையாட்டுகளுடன் நான்கு ரத வீதிகளில் தேர் பவனி வருகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு சிவன் கோயில் வளாகம், ராசி திருமண மண்டபம், மாநகராட்சி திருமண மண்டபம் ஆகிய மூன்று இடங்களில் பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு ரதவீதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தோரோட்ட பவனி விழா குழுவினர் செய்திருந்தனர்.
டாபிக்ஸ்