Palani Temple: பக்தர்கள் காத்திருப்பை தவிரக்க பழனி கோயில் கட்டண பிரேக் தரிசனம் விரைவில் அறிமுகம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்தப்படி பழனி முருகன் கோயிலில் ரூ. 300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆட்சோபனை, ஆலோசனை இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முருக கடவுளின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. மலைக்கோயிலான இங்கு நாள்தோறும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இதை தவிர்க்கும் பொருட்டும், நீண்ட நேரம் வரிசையில் நிற்காமல் உடனடியாக தரிசனத்தை மேற்கொள்ளும் வகையிலும் ரூ. 300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் நடைமுறைப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விரைவில் இந்த திட்டம் அமலுக்கு வர இருக்கும் நிலையில் பக்தர்கள் ஏதேனும் ஆட்சபனை இருந்ந்தாலும், அல்லது தங்களது ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், எளிதில் சாமி தரிசனம் செய்திட ரூ. 10 முதல் ரூ. 100 வரை கட்டண தரிசன வழிகள் பழனி கோயிலில் ஏற்கனவே இருந்து வருகின்றன.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, பக்தர்கள் பெரும் அளவில் வருகை தரும் கோயில்களில் நாள்தோறும் ஒரு மணி நேரம் பிரேக் தரிசனம் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அதை செயல்படுத்தும் விதமாக பழனி கோயிலில் நாள்தோறும் மாலை 3 முதல் 4 மணி வரை பிரேக் தரிசனமானது அறிமுகம் செய்யப்படவுள்ளது.
தமிழ் வருட பிறப்பு, சித்ரா பெளர்ணமி, அக்னி நட்சத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கில வருட பிறப்பு, தைப்பூச திருவிழா, பங்குனி உத்திரம், மாதந்திர கார்த்திக உள்பட 44 திருவிழா, விசேஷ நாள்களிலும் பக்தர்களுக்கு ரூ. 300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்