Girivalam : பௌர்ணமி நாளில் தான் கிரிவலம் போகணுமா?
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாகும். திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் மலையையே சிவனாக வழிபடுவதால் இந்த மலையைப் பெற்று பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.
மாசி மாத கிரிவலம்
இந்நிலையில் மாசி மாத பௌர்ணமி தினமான இன்று (மார்ச் 6) காலை 5 மணிக்குத் தொடங்கி நாளை (மார்ச் 7) 6.45 மணிக்குக் கிரிவலம் நிறைவடைகிறது. இதுவே சரியான நேரம் எனத் திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. மேலும் மாசி மாத பௌர்ணமி என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
பௌர்ணமி கிரிவலம் ஸ்பெஷல்
பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஆளுமை முழுமையாக இருக்கும். இந்நாளில் சந்திரனின் சக்தி அதிகரிக்கும். நல்ல சக்திகள் மேலோங்கி நிற்கும். எனவே இந்த சிறப்பு மிகுந்த நாளில் கிரிவலம் வருவதால் சந்திரனை ஆபரணமாகக் கொண்ட சிவபெருமானின் முழுமையான அருளையும், திருவண்ணாமலையில் மோட்சம் அடைந்த சித்தர்களின் அருள் ஆசியும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கிரிவலத்தில் நன்மைகள்
மாசி மக பௌர்ணமி தினத்தன்று விரதம் இருந்து, புனித நீராடி கிரிவலம் வந்தால் மறுபிறவி கிடைக்காது எனக் கூறப்படுகிறது. உயிருடன் வாழும் நாட்கள் பரிபூரண நன்மைகளோடு வாழலாம் என்பது ஐதீகமாகும்.
அதே சமயம் பௌர்ணமி தினத்தன்று தான் கிரிவலம் வரவேண்டும் என்று அவசியம் கிடையாது. திருவண்ணாமலையில் வருடத்தில் 365 நாட்களும் வலம் வரலாம்.
ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் சிவலோக பதவியைத் தரும், திங்கட்கிழமை கிரிவலம் இந்திர பதவி தரும், செவ்வாய்க்கிழமை கிரிவலம் கடன் மற்றும் வறுமைகளைப் போக்கும், புதன்கிழமை கிரிவலம் கலைகளில் தேர்ச்சியையும், முக்தியையும் தரும், வியாழக்கிழமை கிரிவலம் ஞானத்தைத் தரும், வெள்ளிக்கிழமை கிரிவலம் வைகுண்ட பதவியைத் தரும், சனிக்கிழமை கிரிவலம் பிறவி பிணிகளைப் போக்கும், அஷ்டமி தினத்தன்று கிரிவலம் வந்தால் நம்மிடம் இருக்கும் தீய வினைகள் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
கிரிவலம் செல்லும் போது அன்னதானம் செய்வதென்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். அனைத்து உயிரினங்களும் தானம் செய்தால் சித்தர்களின் ஆசிகளைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி பிறவிபலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
டாபிக்ஸ்