சித்ரா பௌர்ணமி விரதமிருந்தால் பிரச்னைகளை தீர்ப்பார்
மனிதர்களின் பாவ, தர்மக் கணக்குகளை சரிபார்த்து தண்டனைகளை நிர்ணயிக்கும் எமலோக முதன்மை அமைச்சர் சித்ரகுப்தரை நினைத்து விரதம் இருந்தால் தீராத பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
சித்ரகுப்தரை நினைந்து சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விரதமிருந்து வழிபாடு செய்ய உகந்த நாளாகும். இன்றுபௌர்ணமி தினமென்பதால் பக்தர்கள் இன்றைக்கு விரதம் இருந்து சித்ரகுப்தரை முறையாக வழிபாடு செய்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து அகலும்.
கேது பகவான் உடைய அதி தேவதையாக இருக்கும் சித்ரகுப்தர், கேது தோஷங்களையும் நீக்கக் கூடியவர். ஒருவருடைய சுய ஜாதகத்தில் கேது நீசம் பெற்று இருந்தாலும், கேது தோஷம் இருந்தாலும் அவர்கள் இந்த சித்ரா பௌர்ணமி வழிபாட்டை செய்தால் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். கேது தோஷம் இருப்பவர்கள் எளிதில் போதைக்கு அடிமையாகி விடுவார்கள். தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பவர்கள் சித்ரகுப்தரை வழிபட்டு நன்மைகளை பெறலாம்.
மாலையில் தான் சித்ரா பௌர்ணமி பூஜை செய்வது வழக்கம். ஆகையால் மாலை வரை விரதம் இருப்பது நல்லது. விரதம் இருக்க இயலாதவர்கள் பால் பழம் உண்ணலாம். உணவு உன்ன நினைத்தால் உப்பில்லாத உணவை உண்ணலாம். நாள் முழுவதும் சித்ர குப்தனின் நாமத்தை ஜபிப்பது நல்லது.
சித்ரா பௌர்ணமி விரதத்தை முழுமையாக இருப்போர்கள் இரவு சித்திரை நிலவை பார்த்த பிறகு உணவு உண்ணலாம்.
சித்ரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வழிபடுபவர்களுக்கு சித்திரகுப்தர் நல்வழி காட்டுவார். சித்ரா பௌர்ணமி அன்று பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் குடும்பத்துடன் அமைந்து சித்ரான்னம் எனப்படும் கலவை சாதங்களை சாப்பிட வேண்டும். ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் இருப்பவர்கள் அதன் அருகாமையில் அமர்ந்து இவ்வாறு செய்வது மிகவும் நல்லது. அப்படி முடியாதவர்கள் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பௌர்ணமியில் நிலவின் கதிர் வீச்சுகளை உள்வாங்கி மனதார சித்ரகுப்தரை வணங்கி குடும்பத்துடன் உணவு உண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அன்றைய நாளில் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை வாங்கி தானம் செய்யுங்கள்.
சித்ரா பௌர்ணமி நாளில் விரதம் இருப்பதன் மூலம் குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளும் படிப்படியாக குறையும். நீண்டநாள் வழக்கு நமக்கு சாதகமாக முடியும். இந்த நன்னாளில் பலர் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கம். அதன் மூலம் மிக சிறந்த பலன்கள் கிடைக்கும். அதோடு கிரிவலம் செல்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் மிக மிக அரிதான பலன்களை நாம் பெற இயலும்.