Bagavan Krishnar: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலிர்க்க வைக்கும் கதை! புல்லாங்குழலுக்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமை
Sri krishna bagavan: கண்ணன் வளர வளர, அழிக்கவந்த பலதரப்பட்ட ஆபத்துகளை அழித்துச் சிலருக்கு சாப விமோசனம் கொடுத்து, கோகுலத்தில் கண்ணய்யனாக குறும்புகள் செய்து, தாய்பாசத்தில் மிக மகிழ்வு கொண்டிருந்த நேரம், சிவபெருமான் இவரை குழந்தை ரூபத்தில் பார்க்க பேராவல் கொண்டு வந்து பார்த்து வாழ்த்திச் சென்றார்.
2024 மார்ச் மாதம் 4ம் தேதி திங்கட்கிழமை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில், மூலவருக்கு திருமஞ்சனம். பகவான் மகிமைகள் சிலவற்றைக் கண்டு கடை தேறுவோம்.
ஞான மார்க்கம், யோக மார்க்கத்தைக் காட்டிலும், பக்தி மார்க்கமே எளிதாக, பகவானைச் சென்றடைய வழி என்கிறது பாரதம். கிருஷ்ணர்,ஈஸ்வர அவதாரமாகவே பிறப்பு எடுக்க,இதை "அம்சா" அவதாரம் என்பர். இவர் ஒரு" பரிபூர்ணானந்த திவ்ய ஸ்வரூபம்".
"அவ்யக்த" என்றால் தோன்றாதது என பொருள். ஜடவுலகு முழுவதுமே, நம் முன் தோற்றமளிக்கவில்லை . மரணத் தருவாயில், ஒருவன், ஸ்ரீ கிருஷ்ணரின் உருவத்தை நினைத்துக் கொண்டே, உடலை விட, அவன், ஆன்மிக பிரபஞ்சத்தை அடைகிறான். உடல்விட்டு, மறுவுடல் பெறும் விதமும்கூட ஒரு முறைப்படியே நடக்கும்.
ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தனாக வேண்டும் என்பதே ஞானத்தின் மிக முக்கியமான பகுதி ஆகும். ஒருவன் தனது மனதை கிருஷ்ணர் மீது நிலை நிறுத்த வேண்டும். இதை "பிரம்ம சம்ஹிதை", ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.
"சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி, வானோர்கள் நன்னீர் ஆட்டி, அம் தூபம் தரா நிற்கவே, அங்கு ஒரு மாயையில், ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண" என்பார் நம்மாழ்வார். அதாவது,பரம பதத்தில், நித்ய சூரிகள், கண்ணிமைக்காது பார்க்கும் திருமஞ்சனம் கிருஷ்ணருக்கு நடக்க, அடர்த்தியான நறுமணப் புகை மூடி விலகும் இடைவெளியில், பூலோகம் வந்து கிருஷ்ணாவதாரம் எடுத்து, லீலைகள் செய்து, போரும் முடிந்து, தன் ஜோதிக்கு வந்துவிட்டார் என மகிழ்வுடன் புகழ்வார்.
கண்ணன் வளர வளர, அழிக்கவந்த பலதரப்பட்ட ஆபத்துகளை அழித்துச் சிலருக்கு சாப விமோசனம் கொடுத்து, கோகுலத்தில் கண்ணய்யனாக குறும்புகள் செய்து, தாய்பாசத்தில் மிக மகிழ்வு கொண்டிருந்த நேரம், சிவபெருமான் இவரை குழந்தை ரூபத்தில் பார்க்க பேராவல் கொண்டு வந்து பார்த்து வாழ்த்திச் சென்றார். நாட்கள் உருள, அவர் வாழ்வினில் ஏராளமான விஷயங்கள் நடந்தேறியது நாம் அறிந்ததே!
இந்தக் காட்சியை ஸ்ரீ மான் ஊத்துக்காடு வேங்கட கவி
"என்ன தவம் செய்தனை
யசோதா, எங்கும் நிறைப் பரப்பிரம்மம் அம்மா என்று அழைக்க.." எனவும்
"ஈரேழு புவனங்கள் படைத்தவனை,கையில் ஏந்தி, சீராட்டி, பாலூட்டித் தாலாட்ட"தவம் செய்தவள் எனவும் கூறி மகிழ்வார்.
"மன்னர் குலத்தில் பிறந்து ருக்மணி கரம் பிடித்தார். கோகுலத்தில் வளர்ந்து ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையை கை பிடித்த கண்ணன்" என்பார் கூரத்தாழ்வார். தனக்காக இல்லாமல்,பிறர்க்காகவே வாழ்ந்து முகுந்தனாக (வாழ இடமளித்து முக்தி கொடுப்பவன்) பரிமளித்து, தாய்க்கு, தன் வாயினுள், பிரபஞ்சத்தைக் காட்டியவர். பிரம்மாவுக்குத் தாமே பசுவும், கன்றாகவும் காட்சி தந்தவர். பல சமய , சந்தர்ப்பங்களில் தனது விஸ்வ ரூபத்தைக்காட்டி, கோவர்தன மலையைத் தூக்கிச் சுமந்த இவரை "கல்லெடுத்து கல்மாரி காத்தாய் கண்ணா" என்று திருமங்கை ஆழ்வார், தன், திருநெடுந் தாண்டவத்தில் புகழ்ந்துரைக்கிறார்.
அனைத்துப் பொருளுக்கும் ஆதாரமானவன் அவனே, என்பதை"ஆதார ஆதேய சம்பந்தம்"என்பர். "தாங்குபவனும், தாங்கப் படுகிறவனும்அவனே" என அதற்கு பொருள். நமது சிலப்பதிகார காப்பியம், திருமால் வழிபாடு பற்றி பேசுகிறது. 1960 களில் இஸ்கான் அமைப்பு இவ்வழிபாடுகளை,மேற்கத்திய நாடுகளுக்கும் எடுத்துச் சென்றது. வில்லிபுத்தூரார், ஸ்ரீ ராமானுஜர் ஆகியோர் பலவாறும் பாடல்களால் புகழ்ந்திருக்கின்றனர்.
மனித உடலில் இருக்கும் நவ துவாரங்களைப் போல, கண்ணனின் புகழ் பெற்ற புல்லாங்குழலிலும் ஒன்பது துவாரங்கள் இருக்க,சரியாகக் கையாண்டால்,இரண்டுமே இன்பம்தான் என்பார்கள். பதினென் புராணங்களில் சிறந்தது ஸ்ரீமத் பாகவதம், இதில் பிரபஞ்ச சிருஷ்டி வடிவம் அழகுடன் விவரிக்கப்பட்டு வர்ணிக்கப்படுகின்றது. பகவத் கீதை சாமான்ய மக்களுக்கும் புரியும்படி ,தெய்வீகத்தை சம்பாதித்துக் கொள்ளுதல் வேண்டும் என 16வது அத்தியாயத்தில் விளக்கமாக "தை வீ சம்பத்" என கூறும். இதில் எது முக்கியம் என்று ஆதி சங்கரர் கூறுகிறார் தனது கீதை உரை வாயிலாக ஞானத்திலும், யோகத்திலும் நிலைப்பதே முக்கிய தைவீசம்பத் எனக் கூறி, அதன் பெயர் "ஞான யோகவ்யவங்திதி" என்பார்.
கலியுகத்தில் ஹரிகீர்த்தனம் முக்தி அளிக்கும் முக்கிய அடையாளம். வேதமே பகவானைத் துதிக்கும். கோபிகா கீதம், யுகள கீதம், ப்ரமர கீதம் போன்றவை கோபியர் பகவானைத் துதித்துப் பாடியவை. கன்வ மஹரிஷி பல ஆண்டுகள் தவம் செய்த இடத்திலிருந்து எடுத்த மூங்கில்கள் கொண்டு, பிரம்மா ஒரு தனுசை உருவாக்கி அதை கிருஷ்ணருக்கு கொடுக்க சாரங்கம் என்கிற தனுசு அதைப் பெற்று கிருஷ்ணர் சாரங்கபாணி ஆனார்.
ஆதிசங்கர பகவத் பாதாள், தனது சிவ புஜங்கத்திலும், சிவானந்த லஹரியிலும், பக்தியின் பல்வேறு நிலை, பரிமாணங்களை கூறுவார். பகவானை கோபியர்கள் ஆசையாலும்,கம்சன் பயத்தாலும், சிசுபாலன் வெறுப்பாலும், பாண்டவர் நட்பினாலும், விருக்ஷ்னி இனத்தவர் இனப்பற்று காரணமாகவும், யோகிகள் தூய அன்பினாலும், இப்படி ஒரு மனிதன் பகவானை வேண்டிக் கொண்டு, எந்தக் கோணத்தில் இருந்தாலும் அவனை ஏற்றுக் கொண்டு அருளுக்கு பாத்திரமாக்கிக் கொள்கிறார்.
ராஜஸ்தான் மாநில உதய்ப் பூர்ண அருகேயுள்ள இடம் "டாக்கூர்ஜிதாதர்" இங்கு ஒவ்வோரு 45 நிமிடத்திற்கு கிருஷ்ணர் அலங்காரத்தை மாற்றி மாற்றி அமைப்பர். "கிருஷ்ணன் கோவில்" எனும் ஊரே நாகர்கோவில் அருகில் உள்ளது. இங்குக் குழந்தை கண்ணனைத் தாலாட்டித் தூங்க வைப்பர். நேபாளம் காத்மாண்டுவில் "பதன் தர்பார் சதுக்கம்" என்ற இடத்தில் இருக்கும் கிருஷ்ணர் கோவில் அந்த நாட்டின் கல் நினைவுச் சின்னமென்பர். ஷிஹாரா" எனும் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட ஆலயம் இது.. உறியடி திருவிழாவில் தொடங்கி வைத்தவர், நாராயண தீர்த்தர் என்பவர் இவர் பஜனைப் பாடல்கள் பாடும்போது திரைக்குப் பின்புறம் பெருமாள் நடனமாடும் சலங்கை ஒலி கேட்குமாம். "துவாரகீஸன்" என்பது துவாரகை கோவில், இங்கு பிரதான வாயில் சொர்க்க துவாரம் எனப்படும். இதை கடக்க அடுத்தது மோட்ச துவாரம் இதைக் கடந்த பின்னரே கிருஷ்ண தரிசனம். மஹாவிஷ்ணு எடுத்த 9வது அவதாரமான இதில், மனிதன், தன் வாழ்வில், தனது இயல்பான கடமை, நல்ல காரியங்கள் செய்து, வருகின்ற, இன்ப, துன்ப நிழ்வுகளை சமாளித்து, மனமகிழ்வுடன் வாழ்தல் வேண்டும் என்பதை நன்கு உணர்த்திக் சென்றுள்ளார். இவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்து,இதை விடவா நம் துன்பம் பெரியது! என்று நினைத்து,வாழ்க்கைப் பாதையில் நம் பயணத்தை தொடர வேண்டும்.
"மச்ச,கூர்ம,வராஹ,நரசிம்ஹ, வாமன,அவதார மூர்த்தியை-
ராம,கிருஷ்ண,பௌத்த, பலராம, கல்கி அவதார மூர்த்தியை-
தியானித்தெழுந்தேன்!
தியானித்தெழுந்தேன்!
(இது ஒரு கிராமியப் பாடல்)
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்