Ayodhya Ramar Koil: " ராமா" என்கிற மந்திரச் சொல்!
Ramar Koil: மூதறிஞர் ராஜாஜி அவர்கள், சக்கரவர்த்தி திருமகன் என்று ஸ்ரீ ராமனைப் பற்றி எழுதிய இராமாயணம் பெரும் வரவேற்பையும்,புகழையும் பெற்றது என்பது எல்லோரும் அறிந்தது.
ராமாயணம் என்ற ஜீவ நதியில் முங்கி குளிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த இதிகாசத்தில் சொல்லப்படாத அறநெறி கருத்து என எதுவுமே இல்லை என்பார் ஐயா மதிப்பிற்குரிய திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்.
பெற்றோர்களை மதிப்பது, எளிமையாக வாழ்வது, தன்னை அண்டியவர்களை காப்பது, பொறுமை, சகிப்புத்தன்மை கொண்டு இருப்பது, மேலும், உபகார சிந்தை,நன்றி மறவாமை, சகோதர ஒற்றுமை போன்ற எல்லா நற்பண்புகளுக்கும், இன்றைய தலைமுறைக்கு ஸ்ரீ ராமர் தான், உதாரண புருஷன், என்பார் பெரியவர் அழகர் நம்பி ஐயா அவர்கள்.
ராமனின் நல்ல நடத்தையை முன்நோக்கிய கதைக் களமே ராமாயணம். நம் பிள்ளைகளும், ராமனைப் போல, ஒழுக்க சீலராக வாழ வேண்டும் என, தாய் குலத்தால் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டது தான் வால்மீகி ராமாயணம் என்று போற்றுவார், கவிதா பப்ளிகேஷன் ஐயா பெருமதிப்பிற்குரிய,சேது சொக்கலிங்கம் அவர்கள்.
மூதறிஞர் ராஜாஜி அவர்கள், சக்கரவர்த்தி திருமகன் என்று ஸ்ரீ ராமனைப் பற்றி எழுதிய இராமாயணம் பெரும் வரவேற்பையும்,புகழையும் பெற்றது என்பது எல்லோரும் அறிந்தது.
முக்குணங்களில் ஒன்று சாத்வீகம், மற்ற இரண்டு ராஜாஸம் மற்றும் தாமஸம், அருள், ஞானம், ஐம்பொறி அடக்கம், பொறுமை, மேன்மை, வாய்மை ,மௌனம், போன்ற எட்டு லட்சணங்களைக் கொண்டதுதான் சாத்வீகம். இதற்கு உதாரண புருஷராக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ ராமர்.
இன்னும் எத்தனையோ, எண்ணிக்கையில் அடங்காத, குண நலன்களை கொண்ட, ஸ்ரீ ராமருக்குத்தான் 57,400 சதுர அடி பரப்பில், பெரிய கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் சிலையாக, குழந்தை வடிவிலான, ஸ்ரீ ராமர் கோயிலமைத்து, 22/01/2024 ம் நன்நாளில் "ப்ராணப் பிரதிஷ்டை" செய்யப்பட்டது.
அயோத்தி மாநகரம்,மற்ற நகரங்களை போல, புவியில் அமைந்துள்ள, ஒரு சாதாரண இடம் அல்ல. அது, இறைவனே நடமாடிய இடமாகும். ஸ்ரீ ராமர் பிறந்த புண்ணிய பூமியான, அவந்தபுரி என்ற இந்த அயோத்தியானது ஏழு முக்கியமான யாத்திரை தலங்களான, மோட்ச தலங்களில், மிகவும் முதன்மையானது.
ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐந்தாவது, ஆறாவது சர்க்கங்கள் அனைத்தும், அயோத்தியின் பலவகை சிறப்புகளைப் குறிப்பிடுகின்றன. சரயு நதிக் கரையில் அமைந்துள்ள அழகிய நகரம் இது.
திவ்ய,பவ்ய, நவ்ய தேசமான, தர்ம நகரி, அயோத்தியைக் காண, நாட்டில் உள்ள அனைவரும் குறிப்பாக, இளம் தலைமுறையினர் ,வாழ்நாளில்,ஒரு முறையாவது வரவேண்டும் என பெரிய ஆன்மிக தலமாக ஆகிறது அற்புதமான அயோத்தி.
மகாகவி வால்மீகி பெயரில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பின், சாக்ஷம் அயோத்தி, சுரம்யா அயோத்தி, பவநாத்மக் அயோத்தி, அதூ நிக் அயோத்தி, சுகம்யா அயோத்தி, ஆயுஷ்மான் அயோத்தி,ஸ்வச் அயோத்தி என பெயரிட்டு,நகர புனரமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் என்பவர், கிருஷ்ணா சில்லா எனும், ஒரு வகை உயர்ந்த வகை கல்லைக் கொண்டு, உருவாக்கியதுதான் பால ராமர் சிலை.
உத்தரப்பிரதேசம், எட்டா மாவட்டம் ஜலேசரிலிலிருந்து, 2100 கிலோ எடையுள்ள ,எட்டு வகையான உலோகத்தால் தயாரிக்கப்பட்ட,பிரும்மாண்ட ஆலயமணி, சூரத்திலிருந்து, 5000 அமெரிக்க வைரங்கள், இரண்டு கிலோ வெள்ளி, இவைகளைக் கொண்டு 40 கைவினைஞர்கள், 35 நாட்களில் உற்பத்தி செய்த வைர நெக்லஸ் ஒன்று, குஜராத் மாநிலம் வதோதராவிலிருந்து, 3610 கிலோ எடை கொண்ட 108 நீளம் 3.5 அடி சுற்றளவு கொண்ட பிரம்மாண்ட ஊதுபத்தி, ஒன்றரை மாதம் நறுமணம் பரப்பக்கூடிய வகையிலே உள்ளதாக, உத்தரப்பிரதேசம், அலிகாரிலிருந்து, பத்தடி உயரம் 4.6 அடி அகலம், 400 கிலோ எடை கொண்ட உலகிலேயே பெரிய பூட்டு சாவி, இதுபோன்ற பலவகை அன்புப் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஸ்ரீராமரின் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை நாம் படித்திருக்கிறோம், ஆனால், அயோத்தி, நமது பாரம்பரியத்தின் மிகச்சிறந்த, வளர்ச்சி மாற்றங்களைக் கொண்ட ஒரு நகரமாக திகழ, இந்த விசேஷம் ,ஒரு, சீரிய உட்பொருளாகிறது. அதன் பெருமை, கலாச்சார அதிர்வை, உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமை.
"ரமயதி இதி ராம "தன்னை தரிசிப்பவர்களை, வசீகரித்து மகிழ்பவன், என்ற அற்புதமான பொருளைக் கொண்ட அந்த திருநாமம், நினைத்ததை முடிக்கும் ஒரு மந்திரச் சொல்லாக விளங்குகிறது. "ராம நாம ஜெபம்"கொடுத்த மனவலிமையில்தான், மகாத்மா காந்தியடிகள், வெள்ளையர்களிடமிருந்து நமது நாட்டிற்கு ,அகிம்சை வழியில் ,சுதந்திரத்தைப் பெற்று தந்தார். உலகம் உள்ளவரை ,பிரபஞ்சம், முழுவதும் அழியாதவரை, புகழுடன் விளங்க போகிற திருநாமம்" ராமா" என்கிற மந்திரச் சொல். இதனை சொல்லிக் கொண்டே இருக்கக்கூடிய வகையிலே வாய்ப்பினை தந்து, அருள்பாலிக்கிறது இந்த அயோத்தி ராமர் பிரதிஷ்டை விழா.
ராமா என்ற சொல்லை ,அனுமன், ஒவ்வொரு கல்லின் மீதும் எழுதிக் கொடுக்க, அவற்றை, வானர வீரர்கள் சுமந்து சென்று, சமுத்திரத்தில் வீச ,கற்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு மிதந்து, மாபெரும் சேதுவாக, அதாவது பாலமாக, உருவெடுத்தது என்கிறது புராணம். திரேதா யுகத்தின் நாயகன் ஸ்ரீ ராமபிரான்.
"ராஜ ராஜ ஸ்ரீராமன் வந்தான், ராஜ யோகம் தர வந்தான்" எனப்பாடும் கவிகளுடன் கலந்து
"ராமாய ராமபத்ராய ராமச்சந்த்ராய வேதஸே, ரகுநாதய நாதாய ஸீதாய பதயே நமஹ "என்று சொல்லி,ராமச்சந்திரப் பிரபுவின் அனுக்கிரஹங்களை வேண்டி, இந்நாளில், மகிழ்ந்து, தொழுது, வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்