Aadi Masam 2023: ஆடி மாதத்தில் இத்தனை சிறப்புகளா.. அருளின் அருவி இந்த ஆடி மாதம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Aadi Masam 2023: ஆடி மாதத்தில் இத்தனை சிறப்புகளா.. அருளின் அருவி இந்த ஆடி மாதம்!

Aadi Masam 2023: ஆடி மாதத்தில் இத்தனை சிறப்புகளா.. அருளின் அருவி இந்த ஆடி மாதம்!

Manigandan K T HT Tamil
Jul 17, 2023 05:45 AM IST

இம்மாதத்தில் அதிக பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக இருக்குமாம் என்பதைக் கணித்து, வேப்பிலை, எலுமிச்சை பழம், கூழ் போன்றவை இறைவிக்குப் படைத்த பின் நாம் எடுத்துக் கொள்கிறோம்.

கோயில், அம்மன்.
கோயில், அம்மன்.

ஆடி,புரட்டாசி, மார்கழி மாதங்கள் இறை வழிபாட்டுக்குரியதாக வழி வந்தவை. மார்கழி பெருமாள் வழிபாடு, புரட்டாசி மாதம் பித்ருக்கள் வழிபாடு மற்றும் நவராத்திரி உற்சவம். ஆடி முழுவதுமாக அம்மனுக்கு. இதனை "சக்தி மாதம்" என்று ஜோதிட நூல்கள் கூறும். சக்தி அதிகம் உள்ள மாதம்.

சூரியன் இக்காலத்தில் பல சூட்சம சக்திகளைத் தரும். வேத பாராயணங்கள், ஜெபங்கள், மந்திரங்கள், மாந்த்ரீகம் போன்றவைகள் இம்மாதத்தில் செய்யப்படும் போது, அதில் அந்த சக்தியின் பிரதிபலிப்பு வெளிப்படும். இம்மாதத்தை சத்திமயமாக வழிபட ஈஸ்வரன் அனுக்கிரஹம் செய்ததாக வரலாறு உண்டு. ஆகவே இதனை அம்மன் மாதம் என்பார்கள்.

இம்மாதத்தில் அதிக பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக இருக்குமாம் என்பதைக் கணித்து, வேப்பிலை, எலுமிச்சை பழம், கூழ் போன்றவை இறைவிக்குப் படைத்த பின் நாம் எடுத்துக் கொள்கிறோம்.

உடல் சூடு தணிய, சமசீரான வெப்பநிலை ஏற்படுத்தவும், ஆன்டி ஆக்ஸிடென்ட் சக்தி கிடைக்க , எதிர்ப்பு சக்தி ஏற்பட, பாக்டீரியாக்கள் குறைய மேற்படி மருத்துவ குணங்களடங்கிய பொருட்களை இம்மாதத்தில் பயன் படுத்த நமது முன்னோர்கள் பரிந்துரை செய்து வைத்துள்ளனர்.

இது "பீட மாதம்" அதாவது நமது இதய பீடத்தில் இறைவன், இறைவியை ஏற்றி வைத்து வழிபட்டுக் கொண்டாட வேண்டிய சிறப்பான மாதம்.  ஆனால் அறியாமையினால் சிலர் இதை பீடைமாதம் எனக் கூறி தவறு செய்கின்றனர். ஆடி வெள்ளி, செவ்வாய் போன்ற நாட்கள் விரதம் அனுஷ்டித்து, தாம் வேண்டுவனவற்றைக் கோரிக்கைகளாக வைக்கும் உன்னத நாட்கள். அதுவும் குறிப்பாக பெண்களுக்கு..

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் நாக பஞ்சமி, ஆடிப் பெருக்கு வரலக்ஷ்மி விரதம் போன்ற பல பண்டிகைகள் ஆடியில் வரிசை கட்டும். அத்தனை தெய்வங்களுக்குமான மாதம். இதில் திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால் புது தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து தேங்காய் பால் கொடுத்து, விருந்து வைத்த பின்பு, மாப்பிள்ளை அவர் வீட்டிற்கு சென்று விடுவார்.

ஏனெனில் அந்த மாதத்தில் பெண் கருத்தரிக்கக் கூடாது எனும் முன்னோர்கள் கருத்து ஏற்கப்படுகிறது. விவசாயத்தைக் தொடங்கும் காலமிது. மழை பெய்து நீர்ப் பெருக்கு காணும் காலம். நீரை வழிபடும் நாளாகவே ஆடிப் பெருக்கு எனும் ஒரு பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுகிறோம். இந்த காலத்தில்தான் சூரியனின் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக கூறுவர். நதிகள் முக்கியம் வாய்ந்தவை என உணர்ந்து, நதிகளுக்கு மலர்கள், பலவகை புஷ்பங்களிட்டு வழிபடுவர். தற்காலத்தில் இவைகள் அருகி, சுருங்கிக் போனது தூரதிர்ஷ்டமே.

ஆடிப்பட்டம் தேடி விதை எனும் முதுமொழி இதன் சிறப்பைத் தெரிவிக்கிறது. இந்தப் புனித மாதத்தை வரவேற்கும் முகமாகவே உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கங்கை நதி நீர் எடுத்து சிவனுக்கு புனித அபிஷேகம் செய்ய திரளாக பல்வேறு இடங்களிலிருந்து பாத யாத்திரையாக வருவர். ஆடிப்பூரம் என்பது கேரளா மாநிலத்தின்முக்கிய விழா. இம்மாதத்தை ராமாயண மாதமாக கருதுவர். தமிழ்நாட்டில், காஞ்சீபுரத்தில், காமாட்சி அம்மன் ஆலயத்தில் விழா சிறப்பாக நடைபெறும்.

ஹரியும், சிவனும் ஒன்றே என்னும் தத்துவ விளக்கத்திற்காக, நெல்லை சங்கரன் கோவிலில் "ஆடித் தபசு" உற்சவம் 12 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இம்மாதத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பர். அம்மனுக்குப் பல்வேறு காய்கறிகளில் கதம்ப சாதம் படைத்து மகிழ்வர்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆலயத்தில் முருகனுக்கு பெரியதொரு மலர் அபிஷேகம் செய்வர். “ஆடியில் மலர் முழுக்கு , தேடி வரும் முருகனுக்கு” என்று போற்றி வணங்குவர்.

ஆடி மாதத்தில் நடந்ததாகக் கருதப்படும் கஜேந்திர மோட்சம் என்கிற சிறப்பான நிகழ்வை நினைவுபடுத்த, பற்பல நிகழ்ச்சிகளும் திருமால் எழுந்தருளியுள்ள தலங்களில் நடக்கும்.  ஸ்ரீ ஆண்டாள் பிறந்தது ஆடிப் பூரத்தன்றுதான். ஆகவே, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆலயத்தில் ஆண்டாளை நந்தவனத்தில் எழுந்தருளச் செய்துப் பல நிகழ்ச்சிகள் நடக்கும்.

வியாபாரிகள் அவர்தம் பங்கிற்கு சிறப்பு செய்ய, ஆடித் தள்ளுபடி என்று இம்மாதத்தைக் கொண்டாடுவர்.

அடையார் நாயர் சேவா சொசைட்டி எனும் அமைப்பு, கோழிக்கோடு விஜயன் சுவாமிகள் முன்னிலை வகிக்க, ஜுலை 17ம் தேதி "கர்கிடக வாவு பலி" 2023 எனும் முன்னோர்களுக்குரிய விழாவாக திருவான்மியூர் கடற்கரையில் நடத்துகிறது,

அதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்.இதுபோல இப்புனித மாதத்தில் பல நல்ல விஷேசம் கள் நடக்கும். இந்து சமய அறநிலையத்துறை, ஆடி மாதத்தையொட்டி, சென்னை, தஞ்சை கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்து, விருப்பமுடையவர்கள் 044 25333333/ 25333444 தொலைபேசிகளில் தொடர்பு கொள்ள செய்தி வெளியிட்டு ஆடி மாதத்தை சிறப்பு செய்கிறது.

"நெருப்பில்லாமல் சமைக்க முடியாது, ஞானம் இல்லாது மோட்சம் இயலாது, ஞானம் ஒன்றே மோட்சத்திற்கு நேரான வழி" என்பது ஆதி சங்கரரின் வாக்கு. அதை அடைவதற்கு இப்புனித மாதத்தில் இறைவன், இறைவியை மனதார வேண்டுவோம்.

கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

Whats_app_banner

டாபிக்ஸ்