Hanuman Story: அஞ்சனை மைந்தன் அதிவீர அனுமனின் கதை!
அனுமன் காலங்களை ஊடுருவிச் பார்க்கும் சக்தி கொண்டவர் என்பார் திரிகால ஞானியான ஜாம்பவான், இவரின் சக்தியை நினைவூட்டி மலரச் செய்ததில் முதல் நபர்.
உடல் வலிமை குறைந்தவர், அடிக்கடி ஆரோக்ய குறைவு ஏற்பட்டு உபாதை அடைபவர் இனிய இல்லறம் அமைய வேண்டுவோர் அனுமனைக் கொண்டாடுகின்றனர். இவர் சாகசங்களில் மனம் லயித்து அனுபவிப்போர் உண்டு.
ராம பிரானின் முதன்மை பக்தன் இவர். பரந்தாமனையே தன் மார்பில் தாங்கி மகிழும் மகோன்னதமானவரிவர். இராமர் தந்த வடசரம் எனும் மாலையை எப்பொழுதும் தமது கழுத்தில் அணிந்தவர் ஸ்ரீ ராமரை பல நிலைகளில் கண்டு, அவரைத் துதித்து ஸ்ரீ சீதாராம் ஸ்தோத்ரம் பாடி பக்தர்களையும் பாட வைத்தவர்.
ராம் ராம் ஸ்ரீ ராம் ஜெயராம் எனும் நாமங்கள் எதனையும் சீராக்க வல்லது என்பதை உணர்த்தியவர். ருத்ரனின் அம்சம் எனப் போற்றப்படும் இவரைப் போற்றிப் பாடிச் சிறப்பு செய்ய நினைத்த கம்பர், தம் ராமாயணத்தில் பைந்தமிழ் சொல்லாடலால் செந்தமிழ்த் துதியாக எழுதி மகிழ்கிறார்.
"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறுஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு
அறிவார் ஊரில்..
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் எம்மை அளித்துக்
காப்பான்" என்கிறார்.
மிருகசீரிடம், தேவர்களுக்குத் விசேஷமான மார்கழியில், அமாவாசை மூல நட்சத்திரம் இவர் பிறந்த நாள். அதுவே அனுமன் ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒருவரான வாயுவின் புத்திரர் இவர்.
சிவசக்தியே ஒளியாகிப் பின்னர் நுண் உயிராகிப் பிறந்தவர். அனைத்து தேவர்களும் இவருக்குப் பல வரங்களைக் தந்து மகிழ்ந்தனர். பிரம்மாவால் இவர் யாராலும் வெல்ல முடியாத சிரஞ்சீவியாகி, பிரும்மாஸ்திரம் உள்ளிட்ட எதுவும் இவரை எதுவும் செய்யாது என வரத்தையும், குபேரன் மூலம் தடையில்லா செல்வம் கொழிக்க வரமும், எம தர்மர் மூலம் விரும்பும் வரை இறப்பு இல்லை வரமும், ருத்ரன் மூலம் உள்ளும் உடலும் வெப்பம் தகிக்கும் போதெல்லாம் பலம் பெருகும் எனும் வரமும், தேவ சிற்பி விஸ்வ கர்மாவோ, தம்மால் உண்டாக்கப்பட்ட எந்த ஆயுதமும் அனுமனைத் தாக்காது என்ற வரமும் பெற்று, எந்தக் கோள்களும் தங்கள் கட்டுப்பாட்டின் படி அணுக முடியாதவரானார்.
சூரிய பகவானின் சுழற்சிக்கு இணையாக சுற்றிப் பறக்கும் இவரை, "அனுமன் தனி ஆளல்ல, ஒரு தேவர் கூட்ட தொகுப்பு, மாபெரும் சக்திகளின் கலவை, மந்திர தந்திர அஷ்டமா சக்திகள் அவனுள் அடக்கம்" என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதியதைப் படிக்கும் போதே அந்த பிரும்மாண்டத்தை உணரலாம்.
ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அவர் வந்துவிடுவார். "அவர் அருளைப் பெற, அவரைத் துதிக்கத் தேவை இல்லை, ராம ராம என்று கூறியவருக்கே அடிமையாகி சேவை செய்யத் தொடங்குவார்" என்பார் துளசிதாசர்.
அனுமன் காலங்களை ஊடுருவிச் பார்க்கும் சக்தி கொண்டவர் என்பார் திரிகால ஞானியான ஜாம்பவான், இவரின் சக்தியை நினைவூட்டி மலரச் செய்ததில் முதல் ஆள்.
சஞ்சீவி மலையைத் தூக்கிப் பிடித்தபடி காட்சிதரும் இவர் சிலை, தூண் ஒன்றில், தன் வாலால் தன்னை வட்டமாக சுற்றிச் சுற்றி வைத்தவாறு இருக்கும் அற்புதக் காட்சி ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கிறது.
ராமேஸ்வரம் கோவிலுக்கு சிறிது தூரத்தில் இவர் கோவில் ஒன்று உள்ளது. வாலற்ற ஆஞ்சனேயர் எனவும், மண்ணால் ஆனது எனவும், ஆங்காங்கே சிப்பி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காணப்படுகிறது.
பெங்களுரூ மகாலக்ஷ்மி புரத்திலுள்ள வீர ஆஞ்சனேயர் கோயிலை வலம் வரும்போது அஷ்ட லக்ஷ்மிகளையும், அஷ்ட விநாயகர் தரிசனமும் கிடைக்கும். மதுரை உசிலம் பட்டியில், ஆனையூரில் ஐராவதீஸ்வரர் கோயிலில் குழந்தை வடிவில் தாயார் அஞ்சனையின் வலதுபுறம் இருந்து அருள் பாலிக்கிறார்.
திருவரங்கம் அரங்கநாத சுவாமி ஆலய வெளிப்புறம் பக்த ஆஞ்சனேயர் எனும் பெயருடன் விஸ்வரூப வடிவ தரிசனத்தில் காணலாம்.
கவி துளசி தாசரின் அனுமன் சாலிசா 40 பாடல்களைக் கொண்டது. சாலிஸ் என்றால் நாற்பது என்று பொருள். ஒவ்வொரு பாடலும், தனித்தன்மை வாய்ந்ததாகவும், தனித்தனி வரங்களை நல்குவதாகவும் வடிவமைக்கப்பட்டு பாடப்படுகிறது.
இதை தொடர்ந்து சொல்பவர்கள் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்புவர், நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்
அடையாறு, சென்னை.
டாபிக்ஸ்