Andal Story: திருப்பாவை, நாச்சியார் திருமொழி தந்த ஆண்டாள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Andal Story: திருப்பாவை, நாச்சியார் திருமொழி தந்த ஆண்டாள்!

Andal Story: திருப்பாவை, நாச்சியார் திருமொழி தந்த ஆண்டாள்!

Manigandan K T HT Tamil
Jul 24, 2023 05:30 AM IST

சாதாரண பக்தர்கள் வந்து வணங்கிட உருவாக்கப்பட்ட, விஷ்ணு சிலைகள் "அர்சாவ தார" சொரூபம் என்பர். ஆனால் கோதைக்கு கண்ணணாகவே சிறுவயது முதல் தெரிந்தார். இவரது அவதாரம் என்பது, பல காரண, காரியத்துடன் கூடியது.

ஆண்டாள்
ஆண்டாள்

இப்புகழ் பெற்ற ஆலயத்தில் பகவானுக்கு மாலை சூடி மகிழ்வது தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் பெரியாழ்வார். இவரது வளர்ப்பு மகள் கோதை. பிற்காலத்தில் சூடிக் கொடுத்த சுடர்கொடியாகி, ஆண்டவனையே ஆண்டதால் ஆண்டாள் என போற்றி வணங்கப்பட்டாள்.

சாதாரண பக்தர்கள் வந்து வணங்கிட உருவாக்கப்பட்ட, விஷ்ணு சிலைகள் "அர்சாவ தார" சொரூபம் என்பர். ஆனால் கோதைக்கு கண்ணணாகவே சிறுவயது முதல் தெரிந்தார். இவரது அவதாரம் என்பது, பல காரண, காரியத்துடன் கூடியது.

இவரின் கீர்த்தி பற்றி, பெரிய வாச்சான் பிள்ளைத் தனது மூவாயிரப்படி திருப்பாவை வியாக்கினத்தில் "ஆச்சர்யப்படும் எல்லோர் மனதும் இவரது ப்ராவத்தைக் கேட்டால்" என்பார்.

பாவை நோன்பின் மேன்மை கருதி, ஆண்டாள் பாடிய பாசுரங்களே திருப்பாவை. நாச்சியார் திருமொழியும் எளிய தமிழில் எழுதப்பட்டு இவை"கோதைத் தமிழ்" என போற்றப்படுகின்றது.

சிப்பிக்குள் இருக்கின்ற முத்து போல, இதன் உள்ளார்த்தங்கள் அமையப் பெற்று, நல்லொழுக்கம் கொண்டு கடமைகளைச் சரிவர சிரத்தையுடன் செய்ய இறைவனைக் காணலாம் என்ற தர்ம நெறி கூறப்படுகிறது. பக்தி இலக்கிய காலமான கி.பி.7ம் நூற்றாண்டில் கருடாழ்வார் அம்சமாக கருதப்படும் பெரியாழ்வார் ஆண்டாளை வளர்த்த விதமே அது. ஆழ்வார்களுள் திருமாலை வழிபட்டு சிறப்பு நிலை எய்தியவரிவர்.

பவித்ரமான பக்தி காரணமாகவே"தனக்குறியவள் ஆண்டாள்" என அரங்கன் நிச்சயம் படுத்தினார் என்பர்.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண். கோதை என்றால் நல்வாக்கு அருள்பவர் என்பது பொருள். ஆடி மாதம், சுக்ல பக்ஷம், சதுர்த்தியில் பூர நட்சத்திரம் கூடிய நன்னாள் இவ்வுலகு பாக்யம் பெற்றநாளென்பர். எவரைப் போலவும் இல்லாமல், இதுதான் நான் எனத் தன் இயல்பு மாறாமல் நினைத்ததை சாதித்தவர்.

14ம் நூற்றாண்டு மணவாள முனிகள், நாச்சியாரை, விஷ்ணு சித்தர் கண்டெடுத்த நல்முத்து என்று விவரித்து" இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங் காண்டாள் அவதரித்தாள்" என மகிழ்வார்.

ஸ்வாமி தேசிகர் அவர்கள் ஆண்டாள் அனுஷ்டிக்கத் தக்க ஆன்மிகத்தைச் சொல்லி, கோவிந்தன் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ள வழி சொல்கிறார் என்பார்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார். திண்ணியராகப்பெறின்" என்கின்ற குறளுக்கு, இவர் மிகவும் பொருத்தமானவர். 

பாரதியார் இவரின் இளமை காலம், பக்தி, உறுதி, கனவும் நினைவுமான நிலை, விரக தாபம் போன்றவற்றை மிக அழகாக தமது பாடல்களில் எழுதியிருக்கிறார்.

கீதையில் கண்ணன் கர்ம, ஞான, பக்தி ஆகிய மூன்று யோகங்கள் சொல்லி, முக்தி அடைய, சரணாகதியே வழி என்பார். கோதை அதே பாங்குடன் "நாராயணனே நமக்கே பறை தருவான்"என்று அழகு மிளிர சுருக்கமாக கூறுவார்.

அழகும், ஆழ்ந்த பக்தியும், தூய்மையும் நிறைந்த ஆண்டாள் பாசுரங்கள், நம் வேதம், உபநிடதங்களில் கூறியுள்ள கருத்துகளை ஒட்டியே அமைந்துள்ளது. கவிதை நயம், கற்பனைத் திறன் உச்சத்தில் இருக்கும். உலகை அருள் தோட்டமாக, நந்தவனமாகப் பார்த்தவர். 

"வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதை நடை இருந்ததாகத் தெரிய வில்லை"என்று எழுத்தாளர் மறைந்த சுஜாதா கூறுவார்.

மார்கழியில் இசைக்கப்படும் திருப்பாவையில் எந்த இடத்திலும் கண்ணன் பெயர் நேரடியாகச் சொல்லாது, வர்ணனையில் மெருகூட்டியே ஐம்புலன்களுக்கும் விருந்து படைத்திருக்கும். பாங்கு மிக வியப்புக்குரியது!

பழவேரி சக்ரவர்த்தி ராகாவனம்ஹாச்சார்யார் அவர்கள் "பூமாலை சூடிக் கொடுத்தவளின் பாமாலை" என மனம் மகிழ்வார். இவர் பாசுரங்களில் சொற் செறிவு நெகிழ்ச்சி, பக்தி மணம் எல்லாமேகலந்து கதம்பமாக மலர்ந்து மணக்கும் என்பர்.

ஆடிப்பூர நாளில் வைணவ ஆலயங்களில் நாச்சியார் அவதரித்த புனித தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவர். திருமணமாகாத பெண்கள், ஆடிப்பூர நாளில் விரதம் இருந்து வழிபட திருமணம் கைகூடும் என்கிற ஆத்ம பலத்தை அளிக்கும் என்பது ஐதீகம்.

குழந்தைப் பருவத்தில் கண்ணனைப் பற்றியே எண்ணி, குமரிப் பருவத்தில் அவரையே அடைய ஆசை கொண்டு, அதில் உறுதியாக இருந்தது அவளுக்கு கண்ணன் மீதுள்ள ஆளுமையை வெளிப்படுத்துகிறது என்பர்.

அவரும், அவளும் வேறல்ல எனும் எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. இந்த முடிவெடுத்த நிலையில் அவளிடம் ஏற்பட்டிருந்த புற மாறுதல்களைப் பெரிய வாச்சான் பிள்ளை அவர்கள் "இடைமுடிவும் இடைப் பேச்சும் முடை நாற்றமும் ஆயிற்று"என்பார்.

அதாவது, அந்தண குலத்திலானவள், இடையர் குலப் பெண்களுக்கான அத்தனை சாயல்களையும் அருமையாக வரித்துக் கொண்டார். தலைமுடி ஒரு பக்கம் சாய்ந்து அமைய, மொழி மாற, நடை, உடை அனைத்தும் மாறினவே என மகிழ்ச்சி பொங்க கூறுவார்.

திருப்பாவைப் பாடல்கள் அக்கால பக்தி நெறியில் ஒரு புதிய வழிபாட்டு மரபை வரையரை செய்தது. இவரை சொல்லின் செல்வி, மாசிலா பாசுரம் யாத்த கோதா எனப் பலவாறும் போற்றுவர். தமிழ் வேதமான நாலாயிரத் திவ்ய பிரபந்தங்களுக்கு வித்தான கோதையின் பிரபந்தங்கள் அருமையானது என்று ஸ்ரீ இராமானுஜர், வேதாந்த தேசிகர் முதலிய ஆச்சார்யார்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

"கோதை தமிழ் செய்தாள்" என்கிற போற்றுதலுக்குரிய ஸ்ரீ ஆண்டாளுக்கும், திருக்குறுங்குடி திவ்யதேசம் க்ஷேத்ரத்திற்கும் அழகிய தொடர்புண்டு என்பது வராஹ புராணத்தில் உண்டு என்பார்கள்.

தலைமுறை கடந்து ஆன்மிக அன்பர்களை உற்சாகத்துடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது ஆண்டாளின் பாசுரங்கள் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி.

6ம் நூற்றாண்டில், ஆண்டாளுக்கு நைவேத்யமாக, ஸ்ரீவில்லிபுத்துரிலேயே தயாரான மண்டை வெல்லம் கலந்து தயாரிக்கப்பட்ட திரட்டிப் பால் இருந்தது. மண்டை வெல்லம் பார்ப்பதற்கு, திருப்பதி லட்டு போன்றே இருக்கும், காலப் போக்கில், இது பால்கோவாவாக மாறிவிட்டது என்பது சிலரின் கருத்தாக உள்ளது. 

நல்லதை உடனே செய்க, என சொல்வதற்கு, "சுபஸ்ய சீக்கிரம்" என்று சாஸ்த்திரங்கள் கூறும். அதனால் ஆண்டாளைத் தொழுதேற்றி, வழிபட்டு நல்லாசி பெறுவோம்.

கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

Whats_app_banner

டாபிக்ஸ்