’மேஷம் முதல் மீனம் வரை!’ 16 ஆண்டுகால குரு திசை காலத்தில் கொடிகட்டி பறக்கும் யோகம் லக்னம் எது?
By Kathiravan V Aug 20, 2024
Hindustan Times Tamil
நவகிரகங்களில் முதன்மை முழு சுப கிரகம் ஆன குரு பகவான் ஆவார். குரு பகவான் அனைத்து அறிவின் மூலமாகவும் கருதப்படுகிறார். அவர் மூலமாகவே நாம் உலகம் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுகிறோம். ஞானம் என்பது அறிவின் உச்ச நிலை. குரு பகவான் ஞானத்தின் உண்மையான அடையாளமாகக் கருதப்படுகிறார். குரு பகவானின் அருளால் வாழ்க்கை வளம் பெறும்.
ஒரு ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் கெடாமல் இருப்பது அவசியம். குருவும், சுக்கிரனும் கெட்டாலே வாழ்கையின் சுகங்கள் கிடைக்காது. இந்த இரண்டு கிரகங்கள்தான் வாழ்கைக்கு தேவைப்படும் வசதி, வாய்ப்பு, பொருளாதாரம், முன்னேற்றம், மேன்மைகள், கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை தருகின்றன.
ஒரு மனிதனின் ஒழுக்கத்தை சிறப்பாக தரக்கூடிய கிரகம் குரு ஆகும். பெருமை, மேன்மை, தனம், செல்வாக்கு, கல்வி, குழந்தை பாக்கியம் ஆகியவற்றை தரும் கிரமாக குரு உள்ளார். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் கெட்டால், செல்வம், குழந்தை பாக்கியம் பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.
குரு பகவான் 12 லக்னக்காரர்களுக்கும் சிறப்பு செய்வது இல்லை. நட்பு லக்னங்களான மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்களுக்கு நன்மைகளை செய்வார்.
சுக்கிரன் தலைமையிலான ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய பொருள் அணி லக்னங்களுக்கு குரு திசை அந்த அளவுக்கு சிறப்புகளை தருவது இல்லை.
ஆனாலும், குரு பகவான் ஒரு இயற்கை சுபர் என்பதால் மோசமான பலன்களை தருவதும் இல்லை. ஆகாத லக்னங்களுக்கு 3, 6, 10, 11 ஆகிய உபஜெய ஸ்தானங்களில் இருக்கும் போதும் சுபர் ஆகவே செயல்படுவார்.