1980 களில் ஒரு பக்கம் ரஜினியும், இன்னொரு பக்கம் கமலும் போட்டிப்போட்டுக்கொண்டு சினிமாவில் தங்களது கிராஃபை உயர்த்தி சென்று கொண்டிருந்த நிலையில், அவர்களை மீறி தனக்கென தனிபாதையை போட்டு சென்றவர் விஜயகாந்த். கருப்பு தேகம், சிவந்த கண்கள், நடு உச்சி எடுத்து வாரிய முடி, கோபத்தில் துடிக்கும் கன்னங்கள், ஆக்ஷனில் அதகளம் என ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்திற்கு, 100 வது படமாக அமைந்த திரைப்படம்தான் ‘கேப்டன் பிரபாகரன்’.
By Kalyani Pandiyan S Sep 02, 2024
Hindustan Times Tamil
ஆர்.கே செல்வமணி கொடுத்த பரிசு ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், எம்.என்.நம்பியார், மன்சூர் அலிகான், காந்திமதி, பொன்னம்பலம்,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வன அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.
இந்தப் படத்துக்காக விஜயகாந்த் சமரசம் இல்லாத உழைப்பைக் கொடுத்திருந்தார். ஆர்.கே செல்வமணியும் கொஞ்சம் மாறுதலாக விஜயகாந்திற்கு உரித்தான ஓப்பனிங் சாங் இல்லாமல், கிட்டத்தட்ட படம் தொடங்கி அரைமணி நேரத்திற்கு பிறகே அவரை திரையில் காண்பித்தார். இருப்பினும், சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்ஷனை கொடுத்து படத்தை அடுத்தக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்றிருந்தார் ஆர்.கே.செல்வமணி.
கேப்டன் பிரபாகரன் படத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக ரம்யா கிருஷ்ணனின் நடனமும், கதாபாத்திரமும் அமைந்திருந்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆக்ஷன் கதையில ‘பாசமுள்ள பாண்டியரே, 'ஆட்டமா தேரோட்டமா’ என்று இரண்டு பாடல்களை வைத்து தெறிக்க விட்டிருப்பார் இளையராஜா. இன்று வரை பட்டி தொட்டி எங்கும் இப்பாடல்கள் ஒலிக்குது என்றால் அதற்கு இளையராஜாவின் நேர்த்தியான இசை தான் காரணம்.
தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட காலத்தில் இதற்கு ஒரே விதி விலக்கு விஜயகாந்த் மட்டுமே. ஆம், இந்தப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக 275 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது. படத்தின் தலைப்பில் இடம் பெற்ற 'கேப்டன்' என்பது பின்னாளில் விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிப்போனது.