’மேல்நோக்கு நாள்! கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?’ வியக்க வைக்கும் தமிழரின் வானியல் தத்துவம்!
By Kathiravan V Feb 08, 2024
Hindustan Times Tamil
நமது வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள், சம நோக்கு நாள் என எழுதப்பட்டு அதில் அம்புக்குறியீடுகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
இது பண்டைத் தமிழர் தம் வானியல் அறிவு கொண்டு கணக்கிட்ட நாட்களுள் ஒன்று என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
நிலநடுக்கோட்டிலிருந்து சூரியனின் இருப்பிடத்தையும் புவியைச் சுற்றி வரும் சந்திரனின் நிலையையும் அடிப்படையாகக் கொண்டு, மேல்நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என பிரிக்கப்பட்டுள்ளது.
மேல் நோக்கு நாட்களில் வீட்டுக்கு கூறை போடுதல், கட்டிடங்களும் மனை முகூர்த்தம் செய்தல் போன்ற பூமிக்கு மேல் செய்யும் வேலைகளை செய்யலாம்.
ரோகினி, திருவாதரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களை கொண்ட நாட்கள் மேல்நோக்கு நாட்களாக கணக்கீடு செய்யப்படுகிறது.
கீழ்நோக்கு நாட்களில் கிணறு தோண்டுதல், போர்வேல் போடுதல், சுரங்கல் தோண்டுதல், கட்டடங்களுக்கு அடித்தளம் போடுதல், நிலத்திற்கு கீழே மகசூல் தரும் செடிகளை விதைப்பது, நடுவது, அறுவடை செய்வது, நிலத்தி்ற்குக் கீழே செய்யும் வேலைகளைச் செய்வது நன்மை தரும்.
கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்கள் கீழ்நோக்கு நாட்களாக கணக்கீடு செய்யப்படுகிறது.
சம நோக்கு நாளில் பூமியின் தளத்தில் சமமான பணிகளை செய்ய உகந்த நாட்களாக உள்ளது. பூமியை உழுதல், சாலைகளை அமைத்தல், வீட்டிற்கு தளம் போடுதல் உள்ளிட்ட பணிகளை இந்த நாளில் செய்வது நன்று.
அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், சுவாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் வரும் நாட்கள் சமநோக்கு நாட்களாக கணக்கீடு செய்யப்படுகிறது.