பிரபல தொகுப்பாளினியான டிடி வாவ் தமிழா சேனலுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் அவர் தன்னுடைய பர்சனல் சார்ந்த பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் அவர் பேசும் போது, “நான் எப்பொழுதெல்லாம் கேமரா முன்னால் நிற்கிறேனோ, அப்போதெல்லாம் மிக மிக சந்தோஷமாக இருந்து இருக்கிறேன்.
By Kalyani Pandiyan S Aug 12, 2024
Hindustan Times Tamil
வாழ்க்கையில் நீங்கள் சந்திக்க கூடிய எல்லா விஷயங்களுமே, உங்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லிக் கொடுத்துவிட்டுதான் செல்லும். ஆகையால் சூழ்நிலை சரியானதாக இருந்தாலும் சரி, தவறானதாக இருந்தாலும் சரி, அதை நான் சந்தோஷமான தருணமாகவே பார்க்கிறேன். நான் உடல் நல பிரச்சினையால் மிகவும் அவதிப்பட்டு தான் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நான் சிறப்பாக செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறேன். அதற்கு நான் கடவுளுக்கு இங்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆகையால் இதுவும் எனக்கு சந்தோஷமான தருணம் தான். என்னுடைய வாழ்க்கையில், நான் விவாகரத்தையும் எதிர்கொண்டு இருக்கிறேன். ஆனால் நான் விவாகரத்து ஆனவள் என்பதை மக்கள் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்ளவில்லை. இப்போது நான் தான் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த விவாகரத்து வாழ்க்கையும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது.அந்த சமயத்தில், நாம் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைத்து, அந்த முடிவை எடுத்ததும், அதற்கு உதவியதும் அந்த சூழ்நிலைதான்.
ஆகையால் அதுவும் என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷமான தருணம் தான். அது உண்மையில் மிக மிக கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் நான் அதிலிருந்து மீள்வதற்காக வேலை செய்து கொண்டிருந்தேன்.
ரம்யா கிருஷ்ணன் அவர்களுடன் நேர்காணலுக்கு தயாராக கொண்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் கதவு திறக்கப் போகிறது. அப்போதுதான் எனக்கு விவாகரத்து உறுதியானது என்பது தெரியவந்தது. அப்போதுதான் என் மனதிற்குள் எல்லாம் முடிந்து விட்டது என்பது உரைத்தது. உண்மையில் விவாகரத்து என்பது எதிர் தரப்பில் இருப்பவரை விட, என்னை அதிகமாக பாதிக்கும்.
காரணம் நான் மீடியா வெளிச்சத்தில் இருக்கிறேன். நான் இந்த வெளிச்சத்தில் இருக்கிறேன். அதன் விளைவுகளை எதிர்கொள்ள போகிறேன் என்று எனக்குள் சொல்லி முடித்துவிட்டு அந்த நேர்காணலுக்குச் சென்றேன்.” என்று பேசினார்.