மேஷம் முதல் மீனம் வரை! 5 கிரகங்கள் தரும் பஞ்ச மகா புருஷ யோகம் யாருக்கு? உலகையே ஆள வைக்கும் அற்புதம்!
By Kathiravan V Jul 23, 2024
Hindustan Times Tamil
நவகிரகங்களில் ராகு, கேது, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நீங்கலாக மீதம் உள்ள குரு, சனி, சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய ஐந்து கிரகங்களை குஜாதிபர்கள் என்று கூறுவார்கள்.
இந்த 5 கிரகங்கள்தான் பஞ்சமகா புருஷ யோகத்தை ஏற்படுத்துவார்கள்.
பஞ்ச மகா புருஷ யோகத்தில் முதல் தர யோகத்தை குரு பகவான் உண்டாக்குவார். எந்த ஒரு லக்னத்திற்கும், ராசிக்கும் குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர ஸ்தானம் என்று சொல்லக் கூடிய 4, 7, 10ஆம் இடத்தில் அமர்ந்தால் அம்ச யோகம் கொண்ட ஜாதகமாக அமையும். இந்த அம்ச யோகம் ஒருவருக்கு கிடைத்தால், நல்ல கல்வி, பெரிய மனிதர்கள் ஆதரவு, நல்ல தாய் தகப்பன், பொருளாதாரத்தில் முன்னேற்றம், சமுதாயத்தில் மேன்மை, மதிக்கத் தக்க யோக்கிதைகள், பதவிகள், உயர்நிலை, நீண்ட ஆயுள், ஒழுக்கம் உள்ளிட்டவை கிடைக்கும்.
லக்னத்திற்கு கேந்திரத்தில் 4, 7, 10ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றால் மாளவிகா யோகம் உண்டாகும். இதன் மூலம் வாழ்கையில் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கும் லட்சுமி கடாச்சம், எல்லா இன்பங்களையும் அனுபவிப்பது, மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பது, உலக சுற்றுலா செல்வது, வெளிநாடுகளில் வசதியாக வாழ்வது உள்ளிட்ட யோகம் உண்டாகும்.
புதன் தரும் பத்ர யோகம் உங்கள் லக்னத்திற்கு 4, 7, 10ஆம் இடத்தில் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருக்கும் போது உண்டாகின்றது. தெளிந்த அறிவு, உயரிய கல்வி, கற்பதால் மேன்மை, வித்தைகளால் புகழ் பெறுவது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
ருச்சக யோகம் என்பது லக்ன கேந்திரத்தில் செவ்வாய் ஆட்சி உச்சம் பெறும் போது கிடைக்கும் யோகம் ஆகும். இந்த யோகம் மூலம் ஆட்சி, அதிகாரம், அடக்குமுறை, தான் எனும் செயல்திறன், வெற்றி, முதன்மை தன்மை, தலைமை பொறுப்பு உள்ளிட்ட நன்மைகளை கொடுக்கும். காவல்துறை, தீயனைப்பு துறை, ராணுவத் துறையில் உள்ளவர்களுக்கு இந்த ருச்சக யோகம் சிறப்பை தரும். பூரண ஆயுள் பலத்தை இந்த யோகம் ஏற்படுத்தி தரும்.
லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 4, 7, 10 ஆம் இடங்களில் சனி பகவான் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் சச யோகம் உண்டாகும். இந்த சச யோகம் மக்கள் செல்வாக்கை பெற்று தரும். அசைக்க முடியாத மக்கள் தலைவர்களாக இவர்கள் மாறுவார்கள்.