“நம்ம ஒரு பிளான் பண்ணுவோம். ஆனா கடவுள் இன்னொரு பிளான் வச்சிருப்பார்ன்னு சொல்லுவாங்கள்ல, அதுதான் என்னோட வாழ்க்கையில நடந்துச்சு. வீட்ல நான் டாக்டராகணும்னு ஆசைப்பட்டாங்க. பொதுவாவே டாக்டர் தொழில் அழுத்தம் நிறைந்ததா இருக்கும். அதுக்காக, அதுல இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றதுக்காக, டென்னிஸ், குதிரை பந்தயம், டான்ஸ், கராத்தே அப்படின்னு பல விஷயங்கள்ல என்ன அப்பா ஈடுபட வச்சார். ‘An idle mind is the devil's workshop’ அப்படின்னு இங்கிலீஷ்ல பழமொழியே இருக்கு.
நாம, நம்ம வாழ்க்கையில எதுவுமே பண்ணாம இருந்தோம் அப்படின்னா, மனசு வேற ஏதாவது பண்ண சொல்லும். அதன் மூலமா, நாம தப்பான வழியில போவதற்கான வாய்ப்பு இருக்கு. நீங்க இப்படி தொடர்ந்து என்கேஜா இருக்கும் போது, உங்க நேரம் முழுக்க ஆக்கப்பூர்வமா மட்டும்தான் பயன்படும். இந்த செயல்முறையில, நீங்க ரிலாக்ஸூம் பண்ணிக்கலாம். அதே நேரம், புதுசா ஒரு விஷயத்த கத்துக்கவும் முடியும். இப்படியான ட்ராக்ல வாழ்க்கை போகும் போது, நம்ம மைண்ட் எப்போதுமே பாசிட்டிவான ட்ராக்லேயே போயிட்டு இருக்கும்.
நீங்க சொல்ற மாதிரி எப்போதுமே நான் சிரிச்சிட்டே, பாசிட்டிவா இருக்கிறதுக்கு இந்த மாதிரியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம்னு நினைக்கிறேன். எவ்வளவு நடந்தாலும், நான் இவ்வளவு தூரம் ஸ்ட்ராங்கா இருக்குறதுக்கு காரணமே, என்னோட அப்பா அம்மாவுடைய அன்பும், ரசிகர்களோட அன்பும்தான். அது இரண்டும் என்னோட வாழ்க்கையில இரு பெரும் தூண்கள் அப்படின்னு சொல்லலாம்.
அப்பா அம்மா என்கிட்ட சொல்றதெல்லாம் ஒரே விஷயம்தான். எது வேணாலும் பண்ணு, ஆனா ஒழுங்கா தெளிவா பண்ணு. தப்பு பண்ணாத, தப்பு பண்ணா மன்னிப்பு கேட்றதுக்கு தயங்காதே, யாரையும் மனசளவுல புண்படுத்தாத. அது வார்த்தையாலும் சரி, செயலாளும் சரி, சக மனிதர்களாக ஒழுங்கா ட்ரீட் பண்ணு.. இத அவங்க சொல்லிட்டே இருப்பாங்க.
என்னோட அப்பா, முன்னாடியெல்லாம் என்ன வாங்க போங்கன்னு கூப்பிடும் போது, என்ன சார் உங்க பையனையே நீங்க, வாங்க போங்கன்னு கூப்பிடுறீங்க சொல்லுவாங்க. அப்ப, அப்பா சிரிச்சுட்டு போயிடுவார். ஆனா, இன்னைக்கு பல பேர் அவங்களுடைய குழந்தைகளை வாங்க போங்கன்னுதான் கூப்பிடுறாங்க. குழந்தைகளை நாம வாங்க போங்கன்னு கூப்பிடும் போது, நம்மோட குழந்தைகள், மத்தவங்கள இயல்பாவே வாங்க போங்கன்னு கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க.. அதுதான் நல்ல வளர்ப்புக்கான ஒரு உதாரணம்.. அதே மாதிரி நான் தப்பு பண்ணிட்டேன் அப்படின்னா அதுக்காக உடனே என்ன அடிச்சு, கண்டிக்க மாட்டாங்க.