Tamil News  /  Video Gallery  /  Rice & Pooris For Kabaddi Players Served In Front Of Urinal At U.p Stadium

Viral Video: உத்தரப்பிரதேசத்தில் கபடி வீராங்கனைகளுக்கு நடந்த கொடூரம்

20 September 2022, 19:04 IST Karthikeyan S
20 September 2022, 19:04 IST

உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் ஸ்டேடியத்தில் செப்.16-ல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ஆண்கள் சிறுநீர் கழிக்கும் கோப்பைகளுக்கு அருகில் சாதம், குழம்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு, கழிப்பறையின் தரையில் ஒரு தாளின் மீது திறந்தநிலையில் பூரி வைக்கப்பட்டுள்ளதும் காட்டப்படுகின்றது. வீராங்கனைகள் அவற்றில் இருந்து தேவையான உணவுகளை தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுகின்றனர். இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பல்வேறு பிரசாரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் பாஜக அரசால், விளையாட்டு வீரர்களுக்கு உணவு பரிமாற முறையான ஏற்பாடு செய்ய பணம் செலவளிக்க முடியவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மாநில அரசு, சஹாரான்பூர் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து விளக்கம் அளித்த அனிமேஷ், இடம் பற்றாக்குறை காரணமாகவே கழிவறையில் உணவு வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அன்று மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் வீரர்களுக்கு அங்கிருந்த நீச்சல் குளத்தின் அருகில் சாப்பாடு பரிமாறுவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். சில கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்ததாலும், அன்று மழையாக இருந்ததாலும், உணவினை நீச்சல் குளத்துக்கு அருகில் இருந்த ரெஸ்ட் ரூமில் வைத்திருந்தோம். வேறு எங்கும் உணவினை எடுத்து கொண்டுவைக்க முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

More