Temple Festival: பழனி அருகே கருப்பண்ணசாமி கோயில் சித்திரை திருவிழா - 300 ஆட்டுக்கிடாய் வெட்டி சாமி தரிசனம்
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள கோம்பைப்பட்டி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பெரிய துரை கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கிடாய் வெட்டி சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த விழா சரிவர நடக்காத நிலையில், இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 300 ஆட்டுக்கிடாய் வெட்டி கிராம மக்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி, சத்திரபட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, ராம்பட்டினம், புதூர், ஆயக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து அன்னதானம் வழங்கப்படும் . இதன் மூலம் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறுவதாக கிராம மக்கள் நம்புகின்றனர். தொடர்ந்து 42 ஆண்டுகளாக இந்த விழா கிராமத்தில் நடைபெற்று வருகிறது.