Youtube Video : மிரட்டல் வீடியோ வெளியிட்ட யூடியுபர் டிடிஎப் வாசன் மீது வழக்கு
மிரட்டல் வீடியோ வெளியிட்ட யூடியுபர் டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). Twin throttlers என்ற யூடியூப் சேனலை டிடிஎப் வாசன் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு, சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார், இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளர் அய்யப்பன் ராமசாமி என்பவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் வீடியோ ஒன்றை அவரது யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், ‘கேவலம் பணத்துக்காக ஒருத்தரை இழிவுபடுத்தும் நபருக்கு மரியாதை கிடையாது. அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண்களையே சாப்ட்ருவாங்க. இந்த மாதிரி ஆட்களை விட்டு, விட்டு என்னை சின்ன சின்ன விதிமீறல்களுக்கெல்லாம் குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்கிறார்கள். 45 ஆயிரம் பணம் வாங்கிட்டு, திரியுறவன எல்லாம் விட்டுறுவானுங்க. அந்த நாய்க்கு மரியாதையே கிடையாது. வெறியோட வெயிட் பண்றேன். கைல சிக்கனா மூஞ்சி முகரை எல்லாம் உடைப்பேன்" என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயராஜ் புகார் அளித்தார்.