Tamil News  /  Tamilnadu  /  Youth Arrested For Theft In Krishnagiri
திருட்டு - கோப்புபடம்
திருட்டு - கோப்புபடம்

பூட்டிய வீடுகளில் கைவரிசை: கோவாவில் ஜாலியாக இருந்த திருடனை தட்டி தூக்கிய போலீஸ்!

19 March 2023, 0:11 ISTKarthikeyan S
19 March 2023, 0:11 IST

Krishnagiri Theft: கிருஷ்ணகிரி நகரில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு, நகைகளுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி பாலாஜி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கடந்த 15 ஆம் தேதி மோகன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக எஸ்பி சரோஜ்குமார் தாகூர் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தமிழரசி மேற்பார்வையில் நகர காவல் ஆய்வாளர் கபிலன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா, ஏட்டு சாரதி, போலீஸ் ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீஸார், கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதில், கிருஷ்ணகிரி தண்டேகுப்பத்தை சேர்ந்த பழைய குற்றவாளியான சதீஷ்குமார் (25) இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுடன் கோவாவிற்கு ஜாலியாக சுற்றுலா சென்றிருப்பதும் தெரிந்தது. உடனடியாக தனிப்படை போலீஸார் கோவாவிற்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணைக்காக கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர், ஏற்கனவே கிருஷ்ணகிரி அருகே பெரியமோட்டூரில் சிவக்குமார் என்பவரின் வீட்டில் 17.5 பவுன் தங்க நகைகளும், பழையபேட்டை செல்வராஜ் நகரில் உள்ள அம்மு என்பவரது வீட்டில் 5 பவுன் தங்க நகைகள், காவேரிப்பட்டணம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தனலட்சுமி என்பவரின் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் என 30 பவுன் தங்க நகைகள் கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை, தனது நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தை சேர்ந்த விக்கி, விமல் ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தார். இதனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான 80 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து, சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சதிஷ்குமார் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை சம்பவங்கள் தனித்தே ஈடுபடுவது வழக்கமாக கொண்ட சதீஷ்குமார், அந்த நகைகளை விற்று வைப்பூரில் உள்ள தனது நண்பர்களுக்கு செலவு செய்வதும், சுற்றுலா செல்வதையும் வழக்கமாக கொண்டவர் என தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்