‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!
‘தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி வாரியம் (SCERT) சார்பில் வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் சுதந்திரப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்’

‘எட்டயபுரம் சமஸ்தானம் பற்றி தவறான தகவல்’ 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருத்தம் செய்ய கோரிக்கை!
எட்டயபுரம் சமஸ்தானம் தொடர்பாக தமிழ்நாடு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான செய்தியை நீக்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42 வது ராஜா சந்திர சைதன்யா, அது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்துள்ளார். மேலும் அது தொடர்பாக, சமஸ்தானம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆளுமைகள் வாழ்ந்த மண் எட்டயபுரம்
‘‘வணக்கம், தமிழ்நாடு தனிப்பெரும் நாகரிகமும், வரலாறும் கொண்ட மண். இந்த மண்ணின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது எங்களின் எட்டயபுரம் சமஸ்தானம். மகாகவி சுப்பிரமணிய பாரதியார், உமறுப் புலவர், இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் என வரலாற்று ஆளுமைகள் பலரும் வாழ்ந்த மண் எங்கள் எட்டயபுரம்.

