Women's Day : சரித்திரத்தில் இடம் பிடித்த சதிராட்ட நாயகி முத்துக்கண்ணம்மாள்
Women’s Day 2023: மகளிர் மாதத்தில் இப்பகுதியில் பல்வேறு பெண்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று சதிர் நடனக்கலைஞரும், தேவதாசி முறையின் கடைசி வாரிசுமான முத்துக்கண்ணம்மாள் குறித்து பார்க்கலாம். .
அழிந்துவரும் அக்கலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 80 வயதைக்கடந்தும் அந்நடனத்தை ஆடி வரும் புதுக்கோட்டை முத்துக்கண்ணம்மாள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்
அந்த காலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுள் தேவதாசி முறையும் ஒன்று. அதற்காக பெரும் போராட்டத்திற்கு பின்னர், சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு தேவதாசி முறைகள் ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழகத்தில் தேவதாசிகள் புதிதாக உருவாகவில்லை. அதற்கு முன்னர் இருந்த தேவதாசிகளில் எஞ்சியுள்ள ஒருவர் தற்போது புதுக்கோட்டை அருகே வாழ்ந்து வருகிறார். அவர்தான் தேவதாசி மரபின் கடைசி வாரிசாக பார்க்கப்படுகிறார். அவரது பெயர் முத்துக்கண்ணம்மாள். இவர் சதிர் நடன கலைஞரும் ஆவார்.
தேவதாசிகள் என்பவர்கள் பொட்டுக்கட்டி பெண்கள் கோவில்களில் கடவுளுக்கு மனைவியாக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தேவர் + அடியார். தேவர் என்றால் கடவுள், கடவுளின் அடியார்கள் என்பது இதன் பொருள். இவர்கள் கோயில்களில் சதிர் நடனம் ஆடினார்கள். அத்துடன் இவர்களை அந்த ஊர்களில் இருந்த ஆண்கள் தங்கள் கூடுதல் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள். இதனால்தான் இந்த தேவதாசி முறை என்பது பெண்களுக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் எதிராக இருந்தது. எனவே இதை கைவிடவேண்டும். பெண்கள் மற்றும் இதன் மூலம் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முறையை ஒழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் சமூக சீர்திருத்தவாதிகள் ஆண்டாண்டு காலமாக போராடி இம்முறை1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த தேவதாசிகளின் கடைசி வாரிசாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள் பார்க்கப்படுகிறார். 80 வயதைக்கடந்தும் சதிர் ஆடும் ஒரே நடனக்கலைஞராக உள்ளார். இந்த வயதிலும் இவர் சதிர் நடனம் ஆடுகிறார்.
தனது 7வது வயதில் விராலிமலையில் உள்ள சுப்பிரமணியசாமிக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்டு தேவரடியாராக ஆக்கப்பட்டவர்தான் இந்த முத்துக்கண்ணம்மாள். ஆங்கிலேயர்கள் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களுள் ஒருவராவார்.
தேவரடியார்கள் ஒழிப்புச்சட்டம் கொண்டுவந்த பின்னர் கோவில்களில் சதிர் ஆடுவதை பலர் நிறுத்திவிட்டாலும், தான் மட்டும் அதை நிறுத்தவில்லை என்று முத்துக்கண்ணமாள் கூறுகிறார்.
சுப்பிரமணிய சுவாமியே எங்களுக்கு கணவராக காட்டப்பட்டார். அவரை துதித்து நாங்கள் ஆடவேண்டும். எனவே அதை நான் தவறாமல் செய்ய வேண்டும் என்று என் பாட்டி கூறியுள்ளார். எனவே அதை நான் தவறாமல் செய்தேன். முன்பெல்லாம் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் கோவிலுக்குச் சென்று சுவாமியை வணங்குவேன். நடனம், படிப்பு, வழிபாடு என்ற ஒரு வழக்கம் இருந்தது அவருக்கு என்கிறார். இப்போதும் அவர் நடனமாடி வருவதாகவே கூறுகிறார். ஏழு தலைமுறைகளாக இவர்கள் நடனமாடி வருகிறார்கள் இதற்கு பின் நடனமாட யாரும் இல்லை என்பது வருத்தமளித்தாலும், இவர் தற்போது வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் சதிர் நடனமாடி, தேவர்டியார்கள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பரத கலைஞர் பத்மா சுப்ரமணியமும் முத்துக்கண்ணம்மாளின் தந்தை ராமச்சந்திரனிடம் விராலிமலை குறவஞ்சியை கற்றுக்கொண்டவர்தான். சதிர் நடனத்தை நாங்கள் பாடிக்கொண்டே ஆடவேண்டும். ஆனால், நட்டுவனார் பாடினால்தான் பரதம் ஆடமுடியும். பரத்கலையின் முன்னோடி சதிர் நடனம் என்கிறார் முத்துக்கண்ணம்மாள். அக்கலை தற்போது அழிவில் உள்ளது என்று கூறுகிறார்.
இக்கலை அழிந்து வருகிறது என்று தனது முதுமை காலத்திலும் இக்கலை குறித்து பல ஊர்களுக்கும் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இக்கலையின் நுட்பங்கள் குறித்து விளக்கியும் வருகிறார்.
அந்த காலத்தில் தேவரடியார்களாக வாழ்ந்த பெண்கள் நித்திய சுமங்கலிகள் என்று அழைக்கப்பட்டார்கள். திருமணங்களில் அவர்கள் நலங்கு வைத்து பாடல்கள் பாடி தாலி எடுத்து கொடுக்கும் வழக்கமும் இருந்தது. கோயில்களில் நடனமாடுபவர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்கள். தேவரடியார்கள் அவர்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும் இருந்ததாக முத்துக்கண்ணம்மாள் கூறுகிறார்.
டாபிக்ஸ்