Varichur Selvam: ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு.. கோவை முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை!
கோவை மாநகரின் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் போலீஸ் சோதனை. அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தல்.

Varichur Selvam: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கட்டப்பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல். கோவை மாநகரின் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் போலீஸ் சோதனை. அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த வரிச்சியூர் செல்வம்?
மதுரை மாவட்டம் வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவராக அறியப்படுகிறார். பிரபல ரவுடி என்பதை கடந்து, தங்க நகைப் பிரியராக உடல் முழுக்க கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொள்வது, அவருக்கு அலாதி.
அரசியல்வாதியாக, பத்திரிக்கை ஆசிரியராக, புரவலாக தன்னை ஒவ்வொரு காலகட்டத்திலும் அடையாளப்படுத்திக் கொண்ட வரிச்சியூர் செல்வம், பலமுறை போலீசாரின் என்கவுண்டரில் தப்பி, ‘தான் திருந்தி வாழ்வதாக’ கூறுவதும், அதன் பின், மீண்டும் ஏதாவது குற்றநடவடிக்கையில் ஈடுபடுவதும் அவரது வழக்கமாக இருந்து வருகிறது.
கோவையில் சுற்றி வளைக்க முயற்சி
நகைகள், கார்கள் என உயர்தர வாழ்க்கை வாழ்ந்து வரும் வரிச்சியூர் செல்வம், தன் பரம்பரை சொத்தில் அவற்றை அனுபவித்து வருவதாக கூறினாலும், எங்கிருந்து பணம் வருகிறது என்பதே
கேள்விக்குறியாக தான் இருந்து வந்தது. இந்நிலையில் தான், அவர் மறைமுகமாக கட்டப்பஞ்சாயத்துகள் செய்வதும், அதற்காக ரவுடியிசம் செய்து வருவதாக அவ்வப்போது புகார்கள் வரும். அந்த வகையில் தான், தற்போது கோவையில் வரிச்சியூர் செல்வம் ‘சம்பவம்’ ஒன்று செய்ய வந்து, தற்போது போலீஸ் குறியில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் மேலதிக தகவல்களுக்கு போலீஸ் அப்டேட் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

டாபிக்ஸ்