’விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை’ விவசாயிகளுக்கு நீர்வளத்துறை வேண்டுகோள்!
”மேட்டூர் அணையிலிருந்து விடுவிக்கப்பட்ட நீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு விவசாயப் பணிகளின் தேவைகேற்ப ஜுன் 12 முதல் (28.06.2025) இன்று காலை வரை வினாடிக்கு 12,000 கனஅடி முதல் 26,000 கன அடி வரை நீர் திறந்துவிடப்பட்டுள்ளது”

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ளதால் திறந்துவிடப்படும் உபரி நீரை சிறந்த முறையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீர்வளத்துறை கேட்டுக் கொண்டு உள்ளது.
இது தொடர்பாக துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மேட்டூர் அணைக்கு கர்நாடக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அதன் முழுகொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் உபரி நீர் திறந்து விடுவதை சீரான முறையில் அனுப்பிடவும், அந்நீரினை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 12.06.2025 அன்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதுடன், மேட்டூரிலிருந்து திறந்தவிடப்பட்ட நீர் 15.06.2025 அன்று கல்லணை வந்தவுடன், கல்லணை மதகுகளையும் திறந்து வைத்து, நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனவும் விவசாயிகளை அறிவுறுத்தினார்கள்.