கள்ளச்சாராய விற்பனை விவகாரம்.. புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!-why is there no action against the sale of counterfeit liquor despite complaints judges questions to the tn govt - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கள்ளச்சாராய விற்பனை விவகாரம்.. புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

கள்ளச்சாராய விற்பனை விவகாரம்.. புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

Divya Sekar HT Tamil
Jun 21, 2024 12:47 PM IST

Kallakurichi Liquor Death : கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷச்சாராய பலிகள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜூன் 26 ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சாராய விற்பனை விவகாரம்.. புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!
கள்ளச்சாராய விற்பனை விவகாரம்.. புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி!

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக வழக்கறிஞர் மாநில செயலாளர் ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்திருந்த பொது நல வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம், இந்த சம்பவம், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது. தற்பேது 51 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் கண் பார்வையை இழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வாதிட்டார்.

கடந்த 2023ம் ஆண்டில் மரக்காணத்தில் இதேபோல, விஷச் சாராயம் குடித்து 30 பேர் பலியானர். அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வும், மக்களும், காவல் துறையிடம் புகார் அளித்தனர். எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

தங்கு தடையின்றி சாராய விற்பனை நடந்து வருகிறது. கருணாபுரம் பகுதியில் 500 மக்கள் வசித்து வரும் நிலையில், 300 பேர் வரை விஷச்சாராயத்தைக் அருந்தியுள்ளனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து எத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம்

இந்த வாதத்துக்கு பதிலளித்து தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் 2023ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் 14 பேர் பலியாகினர்.

 இந்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 16 காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது எனவும், 2021 ம் ஆண்டு எதிர்க்கட்சி ஆட்சியில் இதுபோல நடந்துள்ளது என விளக்கம் அளித்தார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 116 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 89 பேரின் நிலைமை சீராக உள்ளதாகவும், மீதமுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்; மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் கண்காணிப்பாளரும், மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகள் சரமாரியாக கேள்வி

இதையடுத்து, கடந்த 2023ம் ஆண்டு மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து, அரசின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு வந்த பிறகு, கடந்த ஓராண்டாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அந்த சம்பவத்தின் மூலம் ஏன் பாடம் கற்றுக் கொள்ளவில்லை? கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என நீதிபதிகள், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு முன்பு, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அப்போது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன நடவடிக்கை எடுத்தது. அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என்றனர்.

இதையடுத்து, கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷசாராய பலிகள் தொடர்பான வழக்குகளில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.