’தமிழ்நாட்டில் தமிழை கட்டாய பாடம் ஆக்குவது எப்போது? தெலுங்கானாவிடம் இருந்து மொழிப்பற்றை கற்றுக் கொள்ளுங்கள்’ ராமதாஸ்!
தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப்பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை.

தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப்பாடம், பயிற்று மொழி ஆவது எப்போது? தெலுங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றைக் கற்றுக்கொள்ளுங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானாவில் தெலுங்கு கட்டாயம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தெலுங்கானாவில் தெலுங்கை கட்டாயப்பாடமாக்கும் சட்டம் 2018&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2022&23ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முந்தைய சந்திரசேகரராவ் ஆட்சியில் அச்சட்டம் முறையாக செயல்படுத்தப்படாத நிலையில், இப்போது தெலுங்கு கட்டாயப் பாடச் சட்டம் புதிய தீவிரத்துடன் செயல்படுத்தப்படும்; 2025&26ஆம் ஆண்டில் ஒன்பதாம் வகுப்பிலும், 2026&27ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் தெலுங்கு மொழிப் பாடத்திற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆணை பிறப்பித்திருக்கிறார். தாய்மொழியை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.
