பாசிசம் என்றால் என்ன? எங்கே உருவானது? யார் உருவாக்கியது? அதன் பின்னணி என்ன? பாசிசம்-நாசிசம் வேறுபாடு என்ன?
இத்தாலியில் இருந்த பாசிசத்தில் ‘கார்ப்பரேட்டிசம்’ கலந்தே இருந்தது. பாசிசத்திற்கும் நாசிசத்திற்கும் இருக்கும் பிரச்னை என்னவென்றால், அவை எப்போது ஒன்றுக்கு ஒன்று இணைந்து செல்பவை கிடையாது. இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.

இன்றும் நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகளில் ஒன்று, பாசிசம். பெரும்பாலும் பாஜகவை குறிவைத்து தான், இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை, புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யும், திமுகவையும் பாசிச கட்சி என்று நேரடியாக பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார். பாசிசம் என்றால் என்ன? இந்தியாவில், அதற்கு வெவ்வேறு அர்த்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெரும்பாலான போராட்டங்களில் பாசிசம் என்கிற வார்த்தை இடம் பெற்றிருக்கும். அப்படி என்ன தான் இருக்கிறது பாசிசம் என்கிற வார்த்தையில்? அது எப்போது தோன்றியது? யார் அதை உருவாக்கியத? உண்மையில் அதன் அர்த்தம் தான் என்ன? இதோ பார்க்கலாம்.
இத்தாலியில் தோன்றிய சித்தாந்தம்
பாசிசம் ஒரு அரசியல் சித்தாந்தம். இது 20ம் நூற்றாண்டில் தோன்றியதாகும். பாசிசத்தின் தந்தையாக கருதப்படுபவர், இத்தாலியின் பெனிடோ முசோலினி. 1922 ம் ஆண்டு, தன்னுடைய பாசிச கட்சியை ஆட்சிக் கொண்டு வந்து, இத்தாலியில் அதன் கோட்பாட்டை தொடங்கினார் முசோலினி. அந்த கொள்கையில் ஈர்க்கப்பட்ட அடொல்ப் ஹிட்லர், 1933 ம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் போது, ‘நாசிசம்’ என்கிற பெயரில் பாசிசத்தை உருவாக்கினார்.
பின்னாளில் பாசிசம் என்பது, சர்வாதிகாரம் என்று பொருள்பட்டது. பொருளாதார ரீதியான முடிவுகளையும், இன்னும் பிற முடிவுகளையும் சர்வாதிகார ரீதியில் எடுப்பது தான், பாசிசம் என்று பொருள்பட்டது. பெரும்பாலும் முதலாளிகள் தான், முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தனர். அதனால் தான், பாசிசத்தில் முதலாளித்துவமும் இடம் பெறுகிறது. இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால், தொடக்கத்தில் பாசிசத்தை அடித்தட்டு மக்கள் ஏற்றனர் என்பது தான்.
