எனக்கு என்ன குறை? மக்களைப் பற்றிதான் எப்போதும் என்னுடைய நினைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எனக்கு உடல்நிலை சரி இல்லை, உற்சாகம் இல்லை என ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறும் அயலகத் தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். 218 சர்வதேச தமிழ்ச் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ்ச் சங்கங்கள் இதில் பங்கேற்றனர். 40க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அயலகத் தமிழர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்,” தாய் மண்ணிற்கு உங்களை வரவேற்பது மகிழ்ச்சி. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருக்கிறது. அயலகத் தமிழர் நல வாரியம் மூலமாக உங்களின் உடனடி தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன.
வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ் இணைய கழகம் மூலமாக தமிழ் கற்றுத் தரப்படுகிறது. வெளிநாடுகளில் கைதான தமிழர்களுக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள். எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள்.
அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள். கீழடி, பொருநை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்; தமிழோடு இணைந்திருங்கள்.நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருங்கள். எனக்கு உடல்நிலை சரி இல்லை, உற்சாகம் இல்லை என ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள்.
அதை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது. அதைவிட எனக்கு என்ன வேண்டும்? மக்களைப் பற்றிதான் எப்போதும் என்னுடைய நினைப்பு இருக்கும். என்னைப்பற்றி நினைத்ததில்லை மக்களின் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சிதான் எனக்கு உற்சாக மருந்து” என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
