CM Stalin : ’ஊழலை பற்றி பேச பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கு..? - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!
ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்திற்காக அண்மையில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார்.
இதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நான்கு நாட்கள் பயணமாக திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி, நேற்று முன்தினம் நாகை மாவட்டம் சென்ற அவர், திருக்குவளையில் உள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் சேர்ந்து உணவு அருந்தினார்.
சென்னை திருவல்லிகேணி பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து திருவாரூருக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கினார்.
காலை திருவாரூர் தெருக்களில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் உரையாடி மகிழ்ந்தார். இன்று மதியத்துடன் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் இன்று திருவாரூரில் நடைபெற்ற நாகை எம்.பி. செல்வராஜின் இல்ல திருமணம் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளோம், அதற்காக தான் INDIA கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் இந்திய கம்யூ., கட்சியுடன் கூட்டணி தொடரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, மும்பையில் நடக்கவுள்ள “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்தியாவை காப்பாற்றவே, இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மதக்கலவரங்களால் நாட்டை துண்டாக்கும் கொடிய ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது. சி.ஏ.ஜி. அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல் அம்பலமாகியுள்ளதால் ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சிகிச்சை பெற்ற 88,780 பேர் பலியாகிவிட்டனர். ஆனால், அதற்குப் பிறகும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச் சாவடிகளில் 5 இல் மட்டும் ஆய்வு செய்தபோது 132 கோடி ஊழல் அம்பலமாகியுள்ளது.நாடு முழுவதும் ஆய்வு செய்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தெரியவரும் என சிஏஜி அறிக்கை கூறியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.