Savukku Shankar : சவுக்கு சங்கர் எங்கே? வழக்கில் நடந்தது என்ன? வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் விளக்கம்!
Savukku Shankar : ‘17.12.2024 ல் நடந்த விசாரணையின் போது, அவருக்கு ஸ்டண்ட் வைத்த சிகிச்சைக்காக அவர், மருத்துவமனை சென்றிருந்தார். அன்றைய தினம் டிஸ்சார்ஜ் பெட்டிசன் நிலுவையில் இருந்ததால், சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டிய கட்டாயம் இல்லை’
Savukku Shankar : பிரபல யூடியூப்பரான சவுக்கு சங்கர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என்கிற கேள்வி பலரிடத்தில் உள்ளது. இதுவரை அதற்கான விடை கிடைக்கவில்லை. இந்நிலையில், ரெட் பிக்ஸ் யூடியூப் தளத்தில், சவுக்கு சங்கரின் வழக்கறிஞரான கோபாலகிருஷ்ணன், விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில், சவுக்கு சங்கரின் கைது விவகாரத்தில் நடந்தது என்ன? என்பதை அவர் விளக்கியுள்ளார்.
சவுக்கு சங்கர் தற்போது புழல் சிறையில் இருக்கிறார். ஒரு விசயத்தை நான் தெளிவாக்க விரும்புகிறேன். மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழங்கிய வாரண்ட்டில், அவர் கைதாகி சிறையில் இருப்பதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் தொழில்நுட்ப ரீதியாக, நான் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். தமிழ்நாட்டில் மீடியா உள்ளிட்ட யாருமே , இதை எடுத்துச் சொல்லவில்லை.
டிசம்பர் 17 நடந்தது என்ன?
17.12.2024ல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘அரசியல் ரீதியாக என் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதால், என்னை அதிலிருந்து விடுவிக்க வேண்டும்(டிஸ்சார்ஜ் பெட்டிசன்)’ என்று சவுக்கு சங்கர் சார்பில் மனு செய்கிறார். அந்த மனு, உத்தரவிற்காக நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, வழக்கு தொடர்பான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர், ஆஜர் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இது வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தெரியும்.
ஒருவேளை, சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து விட்டு, குற்றம்சாட்டப்பட்டவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தால், கண்டிப்பாக சவுக்கு சங்கர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், அவர் மனு நிராகரிக்கப்படவில்லை. சிறையில் இருந்து அவர் வந்த பிறகு அவர் பல சிகிச்சைக்கள் எடுத்துள்ளார். ஸ்டண்ட் வைத்துள்ளார். இதற்கிடையில் சில விசாரணைகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார். அவர் வராத நாட்களில், வழக்கறிஞர்கள் மூலம் மனு செய்திருக்கிறோம்.
பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது சரியா?
17.12.2024 ல் நடந்த விசாரணையின் போது, அவருக்கு ஸ்டண்ட் வைத்த சிகிச்சைக்காக அவர், மருத்துவமனை சென்றிருந்தார். அன்றைய தினம் டிஸ்சார்ஜ் பெட்டிசன் நிலுவையில் இருந்ததால், சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், அவருக்கு பதில் வழக்கறிஞர்கள் ஆஜரானோம். அவருடைய மருத்துவ நிலையை விளக்கினோம். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, ஆச்சரியமாக இருந்தது.
நீதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது, அவர் பிடிவாரண்ட் பிறப்பித்தார். நான் அதற்குள் போகவிரும்பவில்லை. காலை 11:30 மணிக்கு மதுரை நீதிமன்றத்தில் வாரண்ட் வழங்கப்படுகிறது. மதியம் 1 மணிக்கு தேனாம்பேட்டை உதவி கமிஷனர், சவுக்கு சங்கர் கைது செய்ப்பட்டு, ஸ்டேஷனில் உட்கார வைக்கின்றனர். வழக்கறிஞர்கள் யாரையும் சந்திக்கவிடவில்லை. எந்த கம்யூனிகேஷனும் இல்லை.
இதற்கிடையில், எந்த வழக்கில் அவர் இருக்கிறார் என்பதை தேடி பிடித்து, அன்று மாலை, மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் மேஜையில், நாங்கள் முறையிட்டோம். ‘எந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள் என்று தெரியாது. எனவே, கீழமை நீதிமன்றத்தை நாடுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். அதுவும் சரியான பதில் தான்.
யார் கட்டுப்பாட்டில் போலீஸ்?
பொதுவாக, நீதிமன்றம் பிறக்கும் பிடிவாரண்டில், சம்மந்தப்பட்டவருக்கு அந்த பிடிவாரண்ட் நேரடியாக வழங்கப்பட்ட பிறகே, அவரை கைது செய்ய முடியும். தேனி பழனிச்செட்டிப் பட்டி போலீஸ் தான், கைது செய்ய முடியும். பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது என்று ப்ரேக்கிங் செய்தி வந்ததுமே, எப்படி ஒருவரை கைது செய்ய முடியும்?
இது ஒன்றும் ரகசியம் கிடையாது. சுத்தமான, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது. இதற்கு முன், அவர் மீது இரண்டு குண்டர் சட்டம் போடப்பட்டது. ஒரு குண்டர் சட்டத்தை வாதிட்டு ரத்து செய்தோம். மற்றொன்றை, டெல்லி உச்சநீதிமன்றம் சென்று பல லட்சம் செலவு செய்து, ரத்து செய்ய வைத்தோம். திரும்பவும் அதே தவறை தான் போலீசார் செய்கிறார்கள். போலீஸ் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியவில்லை. யாரோ ஒருவரின் வழிகாட்டுதலில் தான், அவரை கைது செய்கிறார்கள்,’ என்று அந்த பேட்டியில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
குறிப்பு: பேட்டியில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், தகவல்கள் அனைத்தும் பேட்டியாளரின் சொந்த கருத்துக்கள் மட்டுமே. அதற்கும், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பொதுவெளியில் வெளியான தகவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட செய்தி மட்டுமே.
டாபிக்ஸ்