Weather Update: ’தமிழ்நாட்டில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும்!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
”அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது”
கோடைக்காலம் நெருங்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று தொடங்கி வரும் மார்ச் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று முதல் 10.03.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்களை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை என்றும், மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-
தண்ணீர்
- தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
- வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
- தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.
உணவு
- இலேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.
- தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
- வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
ஆடை
- வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
- தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
- வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.
- சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
- தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
- வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.
டாபிக்ஸ்