Rain Alert: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருக்கா? - வானிலை மையம் கொடுத்த அலர்ட் இதோ.!
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மழை நிலவரம் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நீண்ட நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (அக். 18) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய, கூடிய லேசான மழைபெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 முதல் 78.87 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தமிழகத்தில் அக். 17ஆம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக திருப்பூர் உப்பாறு அணை, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, களியல், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, தீர்த்தாண்டதானத்தில் தலா 8 செ.மீ. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கோவை மாவட்டம் சூலூர், விமான நிலையம், திருச்சி மாவட்டம் தென்பரநாட்டில் தலா 7 செ.மீ. மழை பதிவானது.
தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்