Aarudhra Gold: ’ஆருத்ரா மீது இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம்’ ஐஜி ஆசியம்மாள்
”தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் வழக்கமான போன்களில் பேசாமல் வாட்சப் அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேசி வருகின்றனர்”
பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொருளாதார குற்றப்பிரிவில் 1-1-2023 முதல் 15-5-2023 வரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், பழைய வழக்குகளில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏமாற்றப்பட்ட தொகை 350 கோடி. கடந்த இரண்டு நாட்களில் ஐ.எப்.எஸ் நிறுவனத்தில் இரண்டு பேரும், ஆருத்ரா வழக்கில் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் கிளை பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,ஹிஜாவு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 54 அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மே 17ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளோம். ஹிஜாப், ஐ.எப்.எஸ். வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில் ஆருத்ராவில் இரண்டு வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் .
தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் வழக்கமான போன்களில் பேசாமல் வாட்சப் அழைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பேசி வருகின்றனர். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு ஆர்.சி.என் நோட்டீஸ் தர நடவடிக்கை எடுத்துள்ளோம் என ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.