Vijay Vs DMK: ’சினிமாவை பார்த்தோமா, ரசித்தோமா அதோடு மறந்து விட வேண்டும்’ திமுகவினருக்கு அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவுரை!
சினிமாவை நாம் சும்மா பார்ப்பது கிடையாது, காசு கொடுக்கிறோம். ரசித்தோமா அதோடு வெளியே வந்து விட வேண்டும். அதோடு நமக்கு கட்சிதான் ஞாபகம் இருக்க வேண்டுமே தவிர, நடிகர்கள் ஞாபகம் இருக்க கூடாது என நடிகர் விஜய் பெயரை குறிப்பிடாமல் தாமோ அன்பரசன் விமர்சனம்
சினிமாவை பார்த்தோமா, ரசித்தோமா அதோடு மறந்து விட வேண்டும். அதன் பிறகு கட்சி தான் ஞாபகத்தில் வர வேண்டுமே தவிர நடிகர்கள் ஞாபகம் வரக்கூடாது என சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் தாமோ அன்பரசன் பேசினார். அப்போது, சினிமா பார்த்தோமோ, அதோடு வந்துவிட வேண்டும். சினிமாவை நாம் சும்மா பார்ப்பது கிடையாது, காசு கொடுக்கிறோம். ரசித்தோமா அதோடு வெளியே வந்து விட வேண்டும். அதோடு நமக்கு கட்சிதான் ஞாபகம் இருக்க வேண்டுமே தவிர, நடிகர்கள் ஞாபகம் இருக்க கூடாது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும் போது, ‘செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே நூறு ஏரி உள்ளது. இந்த நூறு ஏறிகளும் நிரம்பிய பின்னரே அடையாறு ஆற்றுக்கு வரும்’ என இன்று பேசினார்.
அதற்கு எதிராக நான் பேசும் போது, ”செம்பரம்பாக்கத்திற்கு கீழேதான் நாங்கள் குடித்தனம் இருக்கிறோம். ஏரிக்கு கீழே உள்ளவர்கள் நாங்கள், செம்பரம்பாக்கம் ஏரிக்கு அடுத்து ஏரியே கிடையாது. அங்கு உள்ள தண்ணீர் நேரடியாக அடையாற்று ஆற்றுக்குதான் வரும் என்று பதில் சொன்னேன் என தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விடியாத ஆட்சி என்று விமர்சித்து வருகிறார். ஆனால் விடியா மூஞ்சிக்கு விடியாத ஆட்சி போலதான் இது தெரியும். தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றி நாட்டு மக்களின் ஆதரவை முதலமைச்சர் பெற்று உள்ளார். மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயை 1.16 கோடி குடும்பங்களுக்கு கொடுத்து வருகிறோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள். அரசில் நிதி நெருக்கடி உள்ளது. அதை சரி செய்துவிட்டு, ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வராத சில குடும்பங்களுக்கும் பணம் வரும் என அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார்.