Annamalai vs Anbil Mahesh: ’BSNL பாக்கி!’ வாயை கொடுத்து வம்பில் சிக்கினாரா அன்பில்?! அம்பலப்படுத்திய அண்ணாமலை!
இண்டர்நெட் சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை 1.5 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.
இண்டர்நெட் சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை 1.5 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ள விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடையே வார்த்தை போர் மூண்டுள்ளது.
இண்டர்நெட் நிலுவை தொகை பாக்கி
தமிழ்நாடு முழுவதும் உள்ள 3700 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிநவீன உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலம் பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய சேவை கட்டணத்தில் ரூ.1.5 கோடி நிலுவை வைக்கப்பட்டு உள்ளதாகவும், இத்தொகையை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழக்கப்பட்டு இருந்தது.
அண்ணாமலை கேள்வி!
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள ’எக்ஸ்’ வலைதள பதிவில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையென்றால், இணைய இணைப்பு துண்டிக்கப்படும் என்று, கடிதம் வந்திருப்பதாக, இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து, வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்? கடந்த மூன்று ஆண்டுகளில், பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ. 5,858.32 கோடி. சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று கடிதம் அளித்து விட்டு, பல திட்டங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது திமுக அரசு. ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.50 கோடியைக் கட்டுவதற்குக் கூட முடியவில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
அண்ணாமலைக்கு அன்பில் பதில்!
அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டில் எந்த மாவட்ட கல்வி அலுவககத்திலும் இணைய இணைப்பு கட்டணம் நிலுவையில் இல்லை. கடந்த மார்ச் முதல் இதுவரை 2,151 கோடியை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்காமல் உள்ளது. ஆனாலும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 43 லட்சம் மாணவர்கள் நலனுக்காக எந்த சம்பள நிலுவை மற்றும் கட்டண நிலுவை இல்லாமல் மாநில அரசு நிதியில் இருந்து ஊதியம் மற்றும் கட்டணங்களை செலுத்தி உள்ளோம்” என கூறினர்.
”பொய் சொல்கிறாரா அமைச்சர் அன்பில் மகேஸ்?”
இதனை தொடர்ந்து அண்ணாமலை பதிவிட்ட அடுத்த எக்ஸ் வலைத்தள பதிவில், ”கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?” என கேள்வி எழுப்பி இருந்தார்.
சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.
”பாக்கி தொகையை கட்டிய அரசு!” அண்ணாமலை ட்வீட்
இதனை அடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை தமிழ்நாடு அரசு செலுத்தியதாக அண்ணாமலை ட்வீட் செய்தார். இதில், அரசுப் பள்ளிகளுக்கான இணையதள சேவைக்கான கட்டணம் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியதும், கடந்த இரண்டு நாட்களாக, நிலுவை இல்லை என்று கூறிக் கொண்டிருந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கட்டண நிலுவை இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்த பின்னர், அவசர அவசரமாக, நிலுவையில் உள்ள மொத்தத் தொகையையும் வழங்கிடப் பள்ளிக் கல்வித்துறை மூலம் இன்று ஆணை பிறப்பித்துள்ளார்.
அமைச்சருக்குத் தனது துறை சார்ந்த பணிகள் குறித்த விவரங்கள் தெரியவில்லையா அல்லது வேண்டுமென்றே இரண்டு நாட்களாகப் பொய் கூறி வந்தாரா? நாட்டின் வருங்காலமான மாணவ சமுதாயத்துக்குப் பொறுப்பான துறை என்பதை நினைவு வைத்திருந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செயல்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.