தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By Election : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக, பாமக வேட்பாளர்கள்!

Vikravandi By Election : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக, பாமக வேட்பாளர்கள்!

Divya Sekar HT Tamil
Jun 19, 2024 09:12 AM IST

Vikravandi By Election : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாளை முதல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக, பாமக வேட்பாளர்கள்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக, பாமக வேட்பாளர்கள்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனுத் தாக்கல் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

திமுக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்,” வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில், தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலானர்) அவர்கள் போட்டியிடுவார்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின் படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி அவர்கள் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளரின் பெயரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,"தமிழகத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிட உள்ளார். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல

திமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். நாளை முதல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை தொடங்க உள்ளனர். கடந்த 14ம் தேதி  விதவிதமான கெட்டப்புகளில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளார். இதேபோல், பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன், ஜான்பாண்டியன் உள்ளிட்டவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். நாம் தமிழர் கட்சி அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.