தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Vijayadharani Resigned As Congress Mla After Switching To Bjp

Vijayadharani: எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணி.. பாஜகவுக்கு சென்றபின் அதிரடி!

Marimuthu M HT Tamil
Feb 25, 2024 07:44 AM IST

சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்

விஜயதாரணி
விஜயதாரணி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். விஜயதாரணி மே 24ஆம் தேதியிட்டு ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘’ நான் எனது சட்டப்பேரவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இது 2024, மே 24ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது’’ என எழுதியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டுப் பேச்சு வார்த்தை என தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி இருந்தது. இந்த நிலையில், விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.ஆக இருந்த விஜயதாரணி நேற்று பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அவர் பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியைத் தனக்கு வழங்க வேண்டும் என விஜயதாரணி கோரிக்கை வைத்ததாகவும், அது செல்வப்பெருந்தகைக்கு கிடைத்ததால் அதிருப்தியில் பாஜகவில் விஜயதாரணி இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'அந்த அம்மையார் எங்கிருந்தாலும் வாழ்க; அன்னை சோனியா காந்தி அவர்கள் இந்த அம்மா மீது கருணை வைத்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார். இந்த கட்சி எல்லாவற்றையும் அவர்களுக்கு கொடுத்தது. பணி செய்யவில்லை என்றாலும் கட்சியில் பெருமையுடன் வழிநடத்தினோம்.

என்னுடைய பார்வை மீண்டும் அவர் திரும்பி வருவார், அங்கே சென்றவர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரியும். இந்த தேசத்தை பாதுகாக்கும் வேலையில் இப்படிப்பட்ட செயலில் இறங்கி இருப்பது வருத்தம். எங்கிருந்தாலும் வாழ்க!’ எனத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்