Thiruma About Vijay:'விஜய்யிடம் வலதுசாரி சாயம் இல்லை…! அவர் பாதை சரியானதே' திடீர் யூடர்ன் அடிக்கும் திருமாவளவன்!
பெரியார், அம்பேத்கர், காமராஜர் என்ற வரிசையில் அவர் வரும் போது அவர் மீது வலதுசாரி அரசியல் என்ற சாயல் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதில் அவர் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் உள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய்யிடம் வலதுசாரி சாயல் இல்லை, அவரது அரசியல் பாதை சரியானதுதான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பேசிய திருமாவளவனிடம் ’விஜய் சரியான பாதையில் செல்கிறாரா?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தன்னுடைய கொள்கை என்ன என்பதையும், கொள்கை ஆசான்கள் யார் என்பதையும் முதல் மாநாட்டிலேயே அறிவித்து உள்ளார். நாம் பேசக் கூடிய சமூகநீதி அரசியலை அவர் ஏற்றுக் கொண்டு உள்ளார். அவருடைய அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் இந்த நிமிடம் வரையில் சரியாக உள்ளது என நம்புகிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் என கூறினார்.
கேள்வி:- பாமக, பாஜகவை அரசியல் எதிரி என வைத்து நீங்கள் அரசியல் செய்கிறீர்கள், அது போன்று அவர் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்களா?
அதுமாதிரி இல்லை. புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் அம்பேத்கர் குறித்து அவர் மேற்கொள் காட்டி உள்ளார். உள்ளபடியே அம்பேத்கரை உள்வாங்க கூடிய புரிதல் அவருக்கு உள்ளது.
கேள்வி:- ரஜினி அரசியலுக்கு வரும் போது வலதுசாரி மேடையில் பேசினார். ஆனால் இவர் இடதுசாரி மேடையை தேர்ந்தெடுத்து உள்ளாரே?
பெரியார், அம்பேத்கர், காமராஜர் என்ற வரிசையில் அவர் வரும் போது அவர் மீது வலதுசாரி அரசியல் என்ற சாயல் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதில் அவர் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் உள்ளார்.
கேள்வி:- அவரோடு எதிர்காலத்தில் பயணிக்க வாய்ப்பு உள்ளதா?
அதற்கு காலம்தான் பதில் சொல்லும். அவர் எந்த அளவுக்கு இதில் உறுதியாக உள்ளார். இடது சாரி களத்தில் எந்த அளவுக்கு உறுதியாக நிற்கிறார் என்பதை பொறுத்துதான் பதில் சொல்ல முடியும்.