ED vs DVAC: ’சீனியர் அதிகாரிகளுக்கு கொடுத்தேன்! ED அதிகாரி அங்கித் திவாரிவீடியோ!’ நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!
“Ankit Tiwari Case Update: தான் பெற்ற லஞ்ச பணத்தை அமலாக்கத்துறையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக அங்கித் திவாரி கூறிய வீடியோ ஆதாரம் உள்ளதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம்”
லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை காப்பாற்ற நினைப்பதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றம்சாட்டி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவர் அமலாக்கத்துறை வழக்கு ஒன்றில் விசாரணை வளையத்தில் இருந்தார்.
இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய உதவுவதாக கூறி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் 3 கோடி ரூபாய் வரை லஞ்சம் கேட்டதாகவும், ஆனால் மருத்துவர் சுரேஷ் பாபு அவர் கேட்ட தொகையை தர மருத்த நிலையில், கண்டிப்பாக 51 லட்ச ரூபாயாவது அன்பளிப்பாகத் தரவேண்டும் எனக் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றா, தேதி அன்று திண்டுக்கல் - நத்தம் சாலையில் வைத்து 20 லட்சம் ரூபாயை மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்துள்ளார். இதனை அடுத்து அதே நவம்பர் மாதம் 30ஆம் தேதி இரவு மீதி பணம் 31 லட்சம் ரூபாயை கேட்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் வெறுத்துப்போன மருத்துவர் சுரேஷ் பாபு, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து கட்ந்த டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொடுத்து அனுப்பினர்.
பின் மருத்துவர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் தோமையார்புரம் அருகே நின்றுகொண்டு இருந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரில் பணத்தை வைத்து உள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி காரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரட்டிச்சென்று கொடைரோடு டோல்கேட் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்தது.
அங்கித் திவாரி கைதை தொடர்ந்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர்.
இதனை அடுத்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்த நிலையில் அவருக்கு நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடக்,கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் நீண்டநாள் திட்டமிட்டு கையும் களவுமாக சிக்க வைக்கப்பட்டுள்ளார் என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை அமலாக்கத்துறை காப்பாற்ற நினைப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கவில்லை வாங்கவில்லை என அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது எப்படி என கேள்வி எழுப்பிய தமிழ்நாடு அரசு, தான் பெற்ற லஞ்ச பணத்தை அமலாக்கத்துறையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாக அங்கித் திவாரி கூறிய வீடியோ ஆதரம் உள்ளதாக தமிழ்நாடு அரசு கூறியது.
அங்கித் திவாரி மத்திய அரசின் அதிகாரி என்பதால் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கூடாது என்று சொல்வது என்ன நியாயம் என கேள்வி எழுப்பிய தமிழ்நாடு அரசு தரப்பு, லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக சிக்கிய அதிகாரியை விசாரிக்க கூடாது என சொல்வது என்ன நியாயம் என்றும், இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வாதங்களை முன் வைத்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், உங்கள் இருதரப்பினர் இடையிலான மோதலில் குற்றம்சாட்டப்பட்டவர் தப்பிவிடக்கூடாது என கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் மார்ச் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9