சென்னை விமான நிலையத்தில் ரூ. 11 கோடி மதிப்பு கோக்கைன் பறிமுதல் - பெண் கைது
வெனிசுலா நாட்டு பெண்மனியிடம் ரூ. 11 கோடி மதிப்பு கோக்கைன் போதை பவுடரை சுங்கத்துறை அலுவலர்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் பெரும் அளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக சுங்கதுறை அலுவலர்களுக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு இன்று வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அதில் தென் அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜோசல் டோரஸ் என்ற பெண்ணிடம் சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறிய அவர், சுங்கத்துறை அலுவலர்கள் கேட்ட மற்ற கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் விலை உயர்ந்த கோக்கைன் போதை பவுடர் மறைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர்.
இதன் சந்தை மதிப்பு ரூ. 11 கோடி 75 லட்சம் என கூறப்படுகிறது. அந்த பெண்ணிடமிருந்த 1 கிலோ 218 கிராம் கோக்கைன் போதை பவுடரை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் போதை பொருள்கள் கடத்தி வந்த வெனிசுலா நாட்டு பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்