திமுகவுக்கு எதிராக மீசையை முறுக்கும் திருமா! அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேரவையில் விவாதிக்க விசிக நோட்டீஸ்!
தமிழ்நாட்டை உலுக்கி உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என விசிக சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான கடிதம் தரப்பட்டு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வேங்கைவயல் விவகார் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் நடத்த சபாநாயகரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடிதம் அளித்து உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜனவரி 6ஆம் தேதி அன்று ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. அன்று பிற்பகல் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டை உலுக்கி உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் வேங்கைவயலில் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என விசிக சார்பில் சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கான கடிதம் தரப்பட்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி உள்ளார்.
இதுமட்டுமின்றி எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் திடக்கழிவு, திரவக்கழிவு ஆகியவற்றை கையாளவும், மேலாணை செய்திடவும் தற்போது மாநகர, நகர, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் தனித்தனியாக பொறுப்பேற்றுள்ள நிலைமாறி ஒட்டுமொத்தமாக “திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாணை துறை” என்ற புதிய துறை அமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என அவர் கடிதம் கொடுத்து உள்ளார். இந்த விவகாரங்களை அவையின் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது குறித்த முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகரிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை ஞானசேகரன் என்பவர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து நடந்த விசாரணையில், சம்பவத்தின் போது ’சார்’ என்ற பெயரில் செல்போனில் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனக்கு பின்னால் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டவே செல்போனில் சார் என்று ஞானசேகரன் பேசியதாக நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளித்தது. மேலும் அந்த நேரத்தில் அவரது செல்போன், ஏரோ பிளைன் மோடில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் அமைத்தது. இக்குழு மாணவியிடம் நடத்திய விசாரணையில், சார் என்ற பெயரில் ஞானசேகரன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் பேசியதை அப்பெண் உறுதி செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து சிறையில் உள்ள ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு திட்டமிட்டு உள்ளது. ஞானசேகரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து டெலிட் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
’யார் அந்த சார்?’ என்ற கேள்வி உடன் அதிமுக மற்றும் பாஜகவினர் கடும் போரட்டத்தை முன்னெடுத்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.